
சபரி மலைக்கு பிரதமர் மோடி வந்தார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தெளிவில்லாத வீடியோ ஒன்று பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் இருப்பது கேரள மாநில ஆளுநர் போல இருந்தது. ஆனால் நிலைத் தகவலில், “சபரிமலையில் பிரதமர் நரேந்திர மோடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோவை Balu Subramaniam என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்டவர் 2022 டிசம்பர் 6ம் தேதி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவைப் பார்க்கும் போது கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் சபரி மலைக்கு சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ போல இருந்தது. பிரதமர் மோடி சபரி மலைக்கு வந்ததாக எந்த ஒரு செய்தியும் இல்லை. அப்படி இருக்கும் போது எதன் அடிப்படையில் இப்படிப் பதிவிட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த வீடியோ கேரள மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சபரிமலை சென்ற போது எடுக்கப்பட்டது என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை மேற்கொண்டோம்.
யூடியூபில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் சபரி மலை பயணம் என்று ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவை வெளியிட்டிருந்த M7 News என்ற ஊடகம் வெளியிட்டிருந்த உண்மையான பதிவே கிடைத்தது. அந்த வீடியோவை எம்7 நியூஸ், 2021 ஏப்ரல் 11ம் வெளியிட்டிருந்தது. அதில் கேரள ஆளுநரின் சபரிமலை பயணம், ஆரிஃப் முகமதுகான் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆளுநர் ஆரிஃப் முகமதுகானின் சமூக ஊடக பக்கங்களையும் பார்வையிட்டோம். அவர் 2021 ஏப்ரலில் சபரி மலைக்கு சென்றதும், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள காட்சிகளில் சிலவற்றைப் புகைப்படமாகப் பகிர்ந்திருப்பதையும் காண முடிந்தது. இதன் மூலம், கேரள ஆளுநர் சபரிமலை சென்ற வீடியோவை எடுத்து பிரதமர் மோடி சபரி மலை வந்தார் என்று தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.
வீடியோவை வெளியிட்ட ஊடகம் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமதுகான் சபரிமலை பயணம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், அந்த வீடியோவை எடுத்து மோடி சபரிமலை வந்தார் என்று தவறான தகவல் சேர்த்து பகிர்ந்துள்ளனர். இதன் அடிப்படையில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கேரள ஆளுநர் சபரிமலைக்கு வந்த வீடியோவை பிரதமர் மோடி வந்தார் என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:‘சபரிமலையில் மோடி வருகை’ என்று பகிரப்படும் கேரள ஆளுநர் வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
