
திரௌபதி படத்தின் இயக்குநர் மோகனை நடிகர் அஜித் அழைத்து பாராட்டியதாக படத்துடன் கூடிய செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link |
நடிகர் அஜித் உடன் திரௌபதி பட இயக்குநர் மோகன் இருக்கும் படம் பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “திரௌபதி இயக்குநர் மோகனை அழைத்து பாராட்டினார் அஜித். சில நேரங்களில் அஜீத்தின் நேர்மையான துணிவு என்னை பிரமிக்க வைக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த பதிவை, LG Segar என்பவர் 2020 ஜனவரி 12ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
திரௌபதி படத்தின் ட்ரெய்லர் கடந்த 3ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், படத்தின் இயக்குநர் மோகன் உடன் அஜித் இருக்கும் படத்தைப் பகிர்ந்து, நேரில் அழைத்து வாழ்த்திய அஜித் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகிறது. படத்தின் நாயகன் ரிச்சர்ட், ஷாலினியின் சகோதரர் என்பதால் இது உண்மையாக இருக்கும் என்று எண்ணி பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து அறிய இயக்குநர் தரப்பைத் தொடர்புகொண்டோம். அப்போது, இயக்குநர் மோகன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலேயே இதற்கான மறுப்பை வெளியிட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் இயக்குநர் மோகனின் ட்விட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அப்போது, 2020 ஜனவரி 13ம் தேதி மோகன் வெளியிட்ட மறுப்பு கிடைத்தது. அதில், “வதந்திகளை நம்பாதீர். திரௌபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை. உலவும் புகைப்படமும் ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே” என்று குறிப்பிட்டிருந்தார்.
Archived Link |
நம்முடைய தேடலில், ஜனவரி 13ம் தேதி இந்து தமிழ் திசை கூட இது தொடர்பான செய்தி வெளியிட்டிருந்தது தெரிந்தது. அதில் கூட, இந்த ட்விட்டர் பதிவையே ஆதாரமாக வைத்திருந்தனர்.
hindutamil.in | Archived Link |
தன்னை அஜித் அழைத்து வாழ்த்தவில்லை, இது ஐந்து ஆண்டுக்கு முன்பு எடுக்கப்பட்ட படம் என்று இயக்குநர் ஜி.மோகன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில், திரௌபதி படத்தின் இயக்குநரை அழைத்து வாழ்த்து நடிகர் அஜித் வாழ்த்து கூறினார் என்று பரவும் பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
