
அருணாச்சலபிரதேசத்துக்குள் ஹாயாக சீன ராணுவம் நுழைந்த போது, வராதீர்கள் என்று சீன ராணுவ வீரர்களின் காலில் விழுந்து இந்திய மூதாட்டி கதறினார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராணுவ வீரர்களை கிராம மக்கள் தடுப்பது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்திய பகுதியான அருணாச்சல் பிரதேசத்துக்குள் எவ்வித தடையும் இன்றி ஹாயாக நுழையும் சீன ராணுவம். உள்ளே வராதீர்கள் என்று காலில் விழுந்து கதறும் இந்திய மூதாட்டி…
நம்ம குசுவ குரு ஹாயாக வெளிநாட்டு சுற்றுலாவில் இருக்கிறான் கபோதி மோடி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவுக்குள் 60 கி.மீ தொலைவுக்கு சீன ராணுவம் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்த தகவல் தவறானது என்று இந்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவின் அருணாசலப்பிரதேச மாநிலத்துக்குள் சீன ராணுவத்தினர் எந்த தடையுமின்றி சுதந்திரமாக நுழைந்ததாகவும், அவர்களின் காலில் விழுந்து இந்திய கிராம மக்கள் வராதீர்கள் என்று கெஞ்சியதாகவும் விடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. ராணுவ வீரர்களைப் பார்க்க சீனாவைச் சார்ந்தவர்கள் போலத் தெரியவில்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை ஜூன் 30, 2026 அன்று Poknapham & The People’s Chronicle என்ற ஊடகம் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. மணிப்புரி மொழியில் வெளியான பதிவை சாட்ஜிபிடி மூலம் மொழிபெயர்த்து பார்த்தோம்.
அதில், “நேற்று, பாம்பேய் தலைமையிலான UNLF-இன் கேடர்கள் வெளியேறிய பிறகு, மாநிலப் பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தில் நுழைந்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதுதொடர்பாக விரிவான தகவலை நம்மால் பெற முடியவில்லை.

அதே நேரத்தில் வீடியோவில் உள்ள ராணுவ அதிகாரிகளின் தோள்பட்டை பேட்ஜ் ஓரளவுக்கு தெரியவே, அதை வைத்து ஆய்வை தொடர்ந்தோம். ஒருவாின் பேட்ஜில் எம்பிஏ என்று இருந்தது. அது என்ன என்று பார்த்த போது மணிப்பூர் பீப்பிள்ஸ் ஆர்மி என்று தெரியவந்தது. United National Liberation Front (UNLF) என்ற அமைப்பின் ராணுவ பிரிவு இது என்று தெரியவந்தது. அந்த United National Liberation Front (UNLF)ன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில் ஒருவர் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் இருந்தவர் சட்டையில் இருந்த பேட்ஜ்ஜை அவரும் அணிந்திருந்ததை காண முடிந்தது. இதன் மூலம் இவர்கள் சீன ராணுவத்தினர் இல்லை என்பது உறுதியானது.
நம்முடைய ஆய்வில் இந்த வீடியோ மணிப்பூரைச் சார்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் அருணாச்சலபிரதேசத்திற்குள் சீன ராணுவத்தினர் நுழைந்ததாக பரவும் இந்த வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மணிப்பூரில் யுனைட்டட் நேஷனல் லிபரேஷன் ஃபிரண்டின் மணிப்பூர் மக்கள் ராணுவத்தினருடன் கிராம மக்கள் சந்தித்த நிகழ்வின் வீடியோவை சீன ராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்தது என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


