
ராஜஸ்தான் மாநிலம் ஶ்ரீகங்காநகர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 13 வயது சிறுமி என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ராஜஸ்தான் மாநிலத்தில் 13 வயது சிறுமியை 23 பேர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தைக் குறிப்பிட்டு, சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த சம்பவம் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்டோவில் சென்ற 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சிறுமி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை பதிவிட்டு, ராஜஸ்தான் பாலியல் வன்கொடுமை சம்பவத்தைப் பற்றி விவரித்துள்ளனர். இதன் மூலம் இந்த சிறுமிதான் அந்த 13 வயது சிறுமி என்பது பகிரப்பட்டு வருகிறது. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: Instagram I Archive
வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இதுவும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வீடியோதான்… ஆனால் இந்த சிறுமி உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தவர் என்று தெரியவந்தது. இந்த வீடியோவை facttious என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் 2026 ஜூலை 3ம் தேதி பதிவிட்டிருந்தது. அதில், “உத்தரப் பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் பட்டியலின சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். குற்றவாளியும் அடையாளம் காணப்பட்டார். ஆனால், பல போராட்டங்களுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறை அலட்சியம் காட்டி வருகிறது என்று சிறுமியின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உண்மைப் பதிவைக் காண: bhaskar.com I Archive
குற்றவாளிகள் மீது உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்படப்பட்டிருந்தது. தொடர்ந்து தேடிய போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவுடன் bhaskar.com என்ற இந்தி ஊடகம் வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய தேடுதலில் இந்த வீடியோ தொடர்பாக ராஜஸ்தான் போலீஸ் வெளியிட்டிருந்த ஃபேக்ட் செக் பதிவும் கிடைத்தது. அதில் ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பரவும் இந்த வீடியோ உண்மையில் உத்தரப்பிரதேசத்தைச் சார்ந்தது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை எல்லாம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பதை உறுதி செய்தன.
முடிவு:
உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வேறு ஒரு சிறுமியின் வீடியோவை வைத்து ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி என்று சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


