
இந்தியாவுக்குள் 60 கி.மீ தொலைவுக்கு நுழைந்து நிலப்பரப்பை சீன ராணுவம் கைப்பற்றியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பச்சை நிற கொடியுடன் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சீன ராணுவம் இதுவரைக்கும் அருணாச்சல பிரதேசத்தில் 60 கிலோ மீட்டர் கைப்பற்றியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இந்தியா உடனடியாக ஆக்ஷனில் இறங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் சீன ராணுவம் இந்தியாவுக்குள் 60 கி.மீ தூரத்துக்கு நுழைந்து இந்திய பகுதியை கைப்பற்றிவிட்டதாக சமூக ஊடகங்களில் வதந்தி பகிரப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரமாக சீன ராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாக வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டதாக சீன ராணுவம் அறிவிக்க வேண்டும் அல்லது இழந்துவிட்டதாக இந்திய ராணுவம் அறிவிக்க வேண்டும். அப்படி நுழைந்திருந்தால் அந்த வீடியோவை சீன ராணுவத்தால் மட்டுமே வெளியிட முடியும். எனவே, இந்த வீடியோ தவறானதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.
வீடியோவின் காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்தியாவுக்குள் சீனா ஊடுருவல் என்று பலரும் இந்த வீடியோவை பதிவிட்டிருந்தனர். தொடர்ந்து தேடிய போது தாய் மொழியில் இந்த வீடியோவை பலரும் பதிவிட்டிருந்ததை காண முடிந்தது. அதில் சியாமிஸ் ராணுவம் மிகப் பெரிய படையுடன் வருகை தந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. சியாம் என்பது தாய்லாந்தின் பழைய பெயர்.
தொடர்ந்து தேடிய போது இந்த வீடியோவை தாய்லாந்தின் ராணுவம் தொடர்பான ஃபேஸ்புக் பக்கம் ஒன்று ஜூன் 16, 2026 அன்று பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அந்த வீடியோவில் இருப்பது போன்று பச்சை நிற கொடியுடன் ராணுவ வீரர்கள் அணிவகுத்துச் செல்லும் வேறு பல வீடியோக்களும் அதில் வெளியாகி இருந்ததைக் காண முடிந்தது. இதன் மூலம் தாய்லாந்து ராணுவ அணிவகுப்பு வீடியோவை எடுத்து இந்தியாவுக்குள் நுழைந்த சீன ராணுவம் என்று தவறாக வெளியிட்டிருப்பது உறுதியானது.
இந்தியாவுக்குள் சீன ராணுவம் நுழைந்தது என்று பரவும் தகவல் தொடர்பாக இந்திய அரசு விளக்கம் அளித்துள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது இந்திய அரசின் பிஐபி ஃபேக்ட் செக் அமைப்பு இந்த தகவல் தவறானது வெறும் வதந்தி என்று குறிப்பிட்டு வெளியிட்டிருந்த பதிவு கிடைத்தது. இதன் மூலம் இந்த தகவல் மற்றும் வீடியோ இரண்டுமே தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
தாய்லாந்து ராணுவ வீரர்கள் அணிவகுப்பு வீடியோவை இந்தியாவுக்குள் நுழைந்த சீன ராணுவம் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


