“கிறிஸ்தவ ஆலயத்தை இடித்த விஜய் அரசு” என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

கிறிஸ்தவ ஆலயத்தை இடித்து தமிழ்நாட்டின் யோகி ஆதித்யநாத் ஆக மாறினார் தமிழ்நாடு முதல்வர் விஜய் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

“பூம்பாறை மாரநாதா பூரண சுவிஷேச சபை” என்ற பெயர் கொண்ட கிறிஸ்தவ ஆலயம் ஒன்று இடிக்கப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “அடுத்த ஆதித்யநாத் யோகியாக மாறினாரா ஜோசப் விஜய்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் விஜய் ஆட்சிக்கு வந்ததும் கிறிஸ்தவ ஆலயம் இடிக்கப்பட்டது என்று வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆட்சிக்கு வந்து 10 நாள் தான் ஆகிறது. அதற்குள்ளாக நீதிமன்ற உத்தரவு பெற்று அகற்றுவது என்பதெல்லாம் சாத்தியமில்லை. எனவே, கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோவை பகிர்ந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை மலையாள ஊடகம் ஒன்று மே 7, 2026 அன்று வெளியிட்டிருந்தது தெரியவந்தது. தெளிவான அந்த வீடியோவை பார்க்கும் போது அதில் அந்த தேவாலயம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பூம்பாறை என்ற இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்த மலையாள ஊடகம் வெளியிட்டிருந்த செய்தியை பார்த்தோம். அதில், “2024ம் ஆண்டு ஆற்றின் பாதையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட மூன்று வழிபாட்டுத்தளங்கள் உள்பட 56 கட்டிடங்களை அகற்ற அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து நிலத்தின் உரிமையாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் மது உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இடத்தை காலி செய்யும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் இந்த நிகழ்வு தமிழ்நாட்டில் நடந்தது இல்லை என்பதும், இந்த கட்டிடம் இடிக்கப்படுவதற்கும் ஜோசப் விஜய் அரசுக்கும் தொடர்பு இல்லை என்பது உறுதியாகிறது. கேரளாவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் விஜய் முதல்வரானதும் நடந்தது போல் தவறாக பகிர்ந்திருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கேரளாவில் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் நீர்வழி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட வீடியோவை தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைத்த பிறகு தேவாலயம் இடிக்கப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: “கிறிஸ்தவ ஆலயத்தை இடித்த விஜய் அரசு” என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply