
குஜராத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மகள் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 98.31 சதவிகித மதிப்பெண் பெற்றதாகவும் ஆனால் ஊடகங்கள் அந்த செய்தியை இருட்டடிப்பு செய்து வருவதாகவும் ஒரு தகவல் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
ஆட்டோ அருகில் தந்தையும் மகளும் இருக்கும் புகைப்படத்தை வைத்து புகைப்பட வடிவிலான பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. அதில், “எந்த ஊடகங்களும் வெளிப்படுத்தவில்லை அகமதாபாத் ஆட்டோ ஓட்டுநரின் மகள் ஆஃப்ரின் ஷேக், GSEB 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் 98.31% மதிப்பெண்களை பெற்றார். இவர் முஸ்லிம் என்பதால் எந்த ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை. நீங்களாவது ஒரு வாழ்த்து சொல்லலாமே” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டும் இஸ்லாமியர் ஒருவரின் மகள் 10ம் வகுப்புத் தேர்வில் 98.31 மதிப்பெண் பெற்றதாகவும், அவர் இஸ்லாமியர் என்பதால் எந்த ஊடகமும் அவரை கண்டுகொள்ளவில்லை என்றும் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். குறிப்பிட்ட சாதி, மதம் சார்ந்து செயல்படும் ஊடகம் அப்படி செயல்படலாம். ஆனால், பொதுவாக எந்த ஊடகமும் இப்படி சாதி, மதம் பார்த்து செய்தியை மறைப்பது இல்லை. எனவே, இந்த தகவல் உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: abplive.com
கூகுளில் அகமதாபாத், ஆட்டோ ஓட்டுநரின் மகள், அஃப்ரின் ஷேக், GSEB, 98.31 சதவிகித மதிப்பெண் என சில அடிப்படை வார்த்தைகளை கூகுளில் பதிவிட்டு தேடினோம். அப்போது, இந்த செய்தி புதிது இல்லை, 2018ம் ஆண்டு வெளியான செய்தி என்பது தெரியவந்தது. 2018ம் ஆண்டிலேயே இந்த செய்தியை டைம்ஸ் ஆஃப் இந்தியா, என்டிடிவி, ஏபிபி, பிசினஸ் ஸ்டாண்டர்டு, ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் என அனைத்து ஊடகங்களும் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது.
ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூட இந்த செய்தியை 2018ம் ஆண்டு வெளியிட்டிருந்தது. தொடர்ந்து தேடிய போது முன்னணி செய்தி ஊடகம் முதல் சிறு இணைய ஊடகம் வரை எல்லோரும் இந்த செய்தியை வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. எனவே, இஸ்லாமிய மாணவி தேர்வில் 98.31 சதவிகித மதிப்பெண் பெற்ற செய்தியை ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
2018ம் ஆண்டு செய்தியை, இப்போது நடந்தது போல குறிப்பிட்டு, ஊடகங்கள் மீது பழி சுமத்தி பதிவிட்டிருப்பது தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குஜராத்தில் 10ம் வகுப்பு தேர்வில் 98.31 சதவிகித மதிப்பெண் பெற்ற இஸ்லாமிய மாணவியை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை என்று பரவும் தகவல் தவறானது என்பதையும் 2018ம் ஆண்டில் நடந்த நிகழ்வுக்கு இப்போது செய்தி வெளியிடவில்லை என்று தவறாக பகிர்ந்திருப்பதையும் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


