
இந்திய போலீஸ் அதிகாரி ஒருவர் கைக்குழந்தையுடன் வந்த இளம் பெண்ணை லத்தியால் அடிக்கிறார் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link 1 | Archived Link 2 |
17 விநாடிகள் ஓடக்கூடிய வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அதில், ஒரு பெண் ஓடுகிறார். அவருக்குப் பின்னால் கையில் குழந்தையுடன் பெண் ஒருவர் வருகிறார். போலீஸ் அதிகாரி போன்ற ஒருவர் அந்த பெண்ணை லத்தியால் கால் மற்றும் பின்புறம் அடித்துத் தள்ளுகிறார். பெண் போலீஸ் ஒருவர் வருகிறார்… ஆனால் அந்த பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யாமல் கடந்து செல்கிறார். தொடர்ந்து அடி விழுகிறது… நடக்க முடியாமல் அந்த குழந்தையை சுமந்தபடி அந்த பெண் செல்கிறார்.
நிலைத் தகவலில், “இந்திய போலீஸ்காரர் தனது குழந்தையை சுமந்து செல்லும் தாயை அடித்துக்கொள்கிறான்😱 இது வைரல் ஆக வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பதிவை, ذكرياتك ذكرياتك என்ற ஐடி கொண்ட நபர் மார்ச் 1, 2020 அன்று வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
வீடியோவில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இந்த சம்பவம் இந்தியாவில் நடந்ததா என்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் எந்த மாநில போலீசும் இப்படி ஒரு சீருடையை அணிந்தது போல இல்லை. எனவே, இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று ஆய்வு மேற்கொண்டோம்.
வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ நேபாளத்தில் எடுக்கப்பட்டது தெரியவந்தது.

Search Link |
இந்த சம்பவம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் உள்ள பைசிபதி என்ற இடத்தில் பிப்ரவரி மாத இறுதியில் நடந்ததாக செய்திகள் வெளியாகி இருந்தது. நேபாள ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரி காதிரி என்பவருக்கும் மாலா என்பவருக்கும் ௧௭ ஆண்டுகளாக தொடர்பு இருந்துவந்துள்ளது. திடீரென்று அந்த பெண்ணுடனான உறவை காதிரி துண்டித்திருக்கிறார் அந்த அதிகாரி. இதனால் நியாயம் கேட்டு பெண்கள் போராடியுள்ளனர். அப்போது ஹிமா ஸ்ரேஷ்டா என்ற பெண்ணை போலீசார் அடித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆனது.

en.setopati.com | Archived Link 1 |
nepalesevoice.com | Archived Link 2 |
thehimalayantimes.com | Archived Link 3 |
அந்த பெண்ணை அடித்த போலீஸ் அதிகாரியின் பெயர் தேவி பிரசாத் பாடெல் என்பதும் ஜவாலாகேல் போலீஸ் நிலையத்தில் ஆய்வாளராக இருப்பதும் தெரியவந்தது. மேலும் அடிவாங்கிய அந்த பெண்ணை அன்று முழுவதும் போலீஸ் காவலில் வைத்திருந்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
பெண்ணை அடித்தது குறித்து போலீஸ் அதிகாரியிடம் கேட்டபோது, “எல்லா இடங்களிலும் பெண் போலீசார் இருக்க முடியாது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அடிப்பது தவிர்க்க முடியாதது” என்ற திமிராகக் கூறியுள்ளார். தாக்கப்பட்ட பெண்ணின் பேட்டி மற்றும் காயங்கள் தொடர்பான செய்தி படங்கள் நமக்கு கிடைத்தன.

nepalpolice.gov.np | Archived Link |
நேபாள போலீஸிசாரின் சீருடை இதுதானா என்று உறுதி செய்ய ஆய்வு செய்தோம். நேபாள போலீஸ் இணையதளத்தில் சீருடை தொடர்பான படங்கள் கிடைத்தன. குளிர்கால சீருடை என்று குறிப்பிட்ட படமும் இளம் பெண்ணை அடித்தவர் அணிந்திருந்த சீருடை, தொப்பியின் நிறமும் ஒரே மாதிரியாக இருந்தன.
நம்முடைய ஆய்வில்,
இளம் பெண்ணை தாக்கிய சம்பவம் நேபாள நாட்டில் நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அடிவாங்கிய பெண்ணின் பேட்டி தொடர்பான செய்தி நமக்கு கிடைத்துள்ளது.
இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நேபாளத்தில் நடந்த தாக்குதலை இந்தியாவில் நடந்தது என்று மாற்றி தவறாக பதிவிட்டது உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை அடித்த இந்திய போலீஸ்!- வைரல் வீடியோ உண்மையா?
Fact Check By: Chendur PandianResult: False
