
இனி மின்சார கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம் என்று பாலிமர் டிவி வெளியிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பாலிமர் செய்திகள் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “இனி மின்சார கட்டணத்தை இணைய வழியில் செலுத்தலாம் என அறிவிப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் முந்தைய அ.தி.மு.க, தி.மு.க ஆட்சிக்காலங்களில் நடைமுறைக்கு வந்த திட்டங்களை எல்லாம் தவெக ஆட்சிக்கு வந்த பிறகு அறிமுகம் செய்தது போன்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை வைத்து தவெக அரசை கிண்டல் செய்யும் வகையில் பல பதிவுகள் சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மின்சார கட்டணத்தை இணையத்தில் செலுத்தலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது போன்று ஒரு நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த நியூஸ் கார்டில் தமிழ்நாடு அரசு அறிவித்தது என்று இல்லை. மேலும் அதில் மே 18, 2026 என்று இருந்தது. எனவே, அந்த குறிப்பிட்ட தேதியில் பாலிமர் டிவி-யில் இப்படி செய்தி வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். அப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் நமக்கு கிடைக்கவில்லை. அதே நேரத்தில் இந்த நியூஸ் கார்டை நாங்கள் வெளியிடவில்லை என்று பாலிமர் செய்திகள் வெளியிட்டிருந்த பதிவு நமக்கு கிடைத்தது.
இந்த செய்தியின் பின்னணி பற்றி அறிய தொடர்ந்து ஆய்வு செய்தோம். அப்போது மே 17, 2026 அன்று தினமலர் வெளியிட்டிருந்த செய்தி ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் இதுவரை ஆன்லைனில் ஒவ்வொரு முறையும் பணம் கட்டி வருகிறோம், இனி தானியங்கி முறையில் பில் தயாரானதிலிருந்து 10வது நாளில் நம்முடைய வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டில் இருந்து நேரடியாக பணம் மின்சார வாரியத்திற்கு செலுத்தும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
நம்முடைய கிரெடிட் கார்ட், இன்டர்நெட், தொலைபேசி கட்டணம் உள்ளிட்ட பலவற்றில் இப்படி குறிப்பிட்ட நாளில் தானியங்கி முறையில் பணம் செலுத்தும் வசதி உள்ளது. அந்த வசதியை தற்போது மின் கட்டணத்திலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வெளியான செய்தியை விஷமத்தமாக மாற்றி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தலாம் என்று பாலிமர் டிவி வெளியிட்டது போன்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


