
ஆவடியில் ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.க துண்டு போட்டிருப்பது போலவும் அவர்களே தவெக துண்டு போட்டிருப்பது போலவும் இரண்டு நியூஸ் கார்டுகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன. அது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
சன் நியூஸ் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. இரண்டு பேர் தவெக துண்டு அணிந்திருக்கும் இருவர் கைது செய்யப்பட்டது போன்று செய்தி இருந்தது. அதில், “இருவர் கைது. ஆவடியில் மின்வாரிய அலுவலகத்தின் பின்புறம் மின்சார கேபிள் பெட்டியில் 14 பியூஸ் கேரியர்கள் திருடப்பட்ட வழக்கில், அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் குமார், வினித்குமார் கைது. திருட்டுக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: Facebook
இதே நியூஸ் கார்டை தி.மு.க துண்டு அணிந்திருப்பது போன்று எடிட் செய்தும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த இரண்டு நியூஸ் கார்டுகள் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மாநிலத்தின் பல பகுதிகளில் மின்சார வெட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. இதற்கு தி.மு.க ஆதரவாளர்கள் காரணம் என்பது போன்று தவெக-வினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஃபியூஸ் கேரியர்கள் திருடப்படுவதே மின்வெட்டுக்கு காரணம் என்று மின்வாரிய தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கு பலம் சேர்க்கும் வகையில் ஆவடியில் மின்சார ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசியல் பின்புலம் பற்றி இதுவரை செய்தி வெளியாகவில்லை. ஆனால் இவர்கள் தி.மு.க-வை சார்ந்தவர்கள் என்று த.வெ.க-வினரும், இவர்கள் த.வெ.க-வை சேர்ந்தவர்கள் என்று தி.மு.க-வினரும் சன் நியூஸ் வெளியிட்ட ஒரு நியூஸ் கார்டை மூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதில் எது உண்மையானது என்று அறிய ஆய்வு செய்தோம். இப்படி ஒரு நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தை பார்த்தோம். அதில் இருவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக நியூஸ் கார்டை வெளியிட்டிருந்த கண்டறிந்தோம். ஆனால் அதில் அவர்கள் இருவரும் கட்சிக் கொடி துண்டு எதையும் அணிந்திருக்கவில்லை. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட இரண்டு நியூஸ் கார்டுகளையும் சன் நியூஸ் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பினோம். அவரும் இவை போலியானவை, எடிட் செய்யப்பட்டவை என்று உறுதி செய்தார்.

இதன் மூலம் தி.மு.க மற்றும் தவெக என இரு தரப்பினரும் சன் நியூஸ் வெளியிட்டிருந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வதந்தி பரப்பியிருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவுகள் எடிட் செய்யப்பட்டவை என்று உறுதி செய்யப்படுகின்றன.
முடிவு:
ஆவடியில் ஃபியூஸ் கேரியர்களை திருடியதாக கைது செய்யப்பட்ட இருவர் தி.மு.க மற்றும் த.வெ.க துண்டு அணிந்திருப்பது போல் பரவும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


