
ஈரானில் அமெரிக்கா, இஸ்ரேல் கொடிகளுடன் சேர்த்து இந்திய தேசியக் கொடியும் எரிக்கப்பட்டது என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்திய தேசியக் கொடிகள் சாலையில் எரிக்கப்படும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் “ஈரானில் இந்திய தேசியக் கொடி எரிப்பு. உலகம் முழுவதும் பரபரப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஈரானின் மீது கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவரான அலி கமேனி உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில் ஈரானில் இந்திய தேசிய கொடி எரிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் நட்புறவு உண்டு. அப்படி இருக்க இந்தியாவின் கொடியை எரிக்க வாய்ப்பு குறைவு என்பதால் இந்த வீடியோ உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது ஈரானில் இந்த சம்பவம் நடந்ததாகப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அப்படி பதிவிடப்பட்டிருந்த வீடியோக்கள் பலவும் தெளிவாக இருந்தது.

அப்படி பதிவிடப்பட்டிருந்த ஒரு வீடியோவை பார்த்தோம். அதில், ரத்த தான முகாம் என்று கட்டப்பட்டிருந்த பேனர் ஒன்றில் கராச்சி என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, இந்த வீடியோ ஈரானைச் சார்ந்ததாக இருக்காது என்று தெரிந்தது. இதை உறுதி செய்துகொள்ளத் தொடர்ந்து தேடினோம். அப்போது கராச்சியில் இந்தியா, அமெரிக்கா, இஸ்ரேல் கொடிகள் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக வெளியான பதிவுகள் நமக்கு கிடைத்தன.

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்திலும் கூட இது தொடர்பான ஃபேக்ட் செக் கட்டுரை வௌியாகி இருந்தது. அதில், இந்த ஆர்ப்பாட்டம் நடந்த இடம் பாகிஸ்தானின் கராச்சியில் இருக்கிறது என்று கூகுள் ஸ்ட்ரீட் காட்சிகளையும் வைத்திருந்தனர். அந்த இடமும், ஆர்ப்பாட்டம் நடந்தது தொடர்பாக வெளியான இதர பதிவுகளில் இடம் பெற்ற இடமும் ஒன்றாக இருந்தது. எனவே, இந்த சம்பவம் ஈரானில் நடந்தது இல்லை என்பது உறுதியானது.
முடிவு:
பாகிஸ்தானில் இந்திய தேசியக் கொடியை எரித்த சம்பவத்தின் வீடியோவை எடுத்து ஈரானியர்கள் இந்திய தேசியக் கொடியை எரித்ததாக தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


