
தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கூறிய கருத்து அடிப்படையில் தி.மு.க ஆதரிக்கிறது என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எதிர்ப்பு காரணமாக பாஜக மற்றும் இந்த மசோதாவை தி.மு.க ஆதரிப்பது போல பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “”திமுக ஆதரிக்கிறது..” தொகுதி மறுவரையறை மசோதாவில் திமுகவின் நிலைப்பாடு குறித்து எம்பி திருச்சி சிவா விளக்கம் “தொகுதி மறுவரையறை குறித்து அரசு தெளிவான வழிமுறையை வெளியிட வேண்டும். தென் மாநிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தற்போது உள்ள தொகுதி எண்ணிக்கையின் படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை திமுக ஆதரிக்கிறது. தொகுதி மறுவரையறை குறித்து மேலும் தெளிவு வேண்டும். வரைவு மசோதாவை பார்த்த பின்னரே இறுதி நிலைப்பாடு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “அடபோங்கடா நீங்களும் உங்க அரசியலும் பேசாம நாடு மாறிடலாம்😤 காங்கிரஸை பழிவாங்குறான்னு இதை ஆதரிக்க கூடாது அரசியல்ல மக்கள் நலனே முக்கியம் பழிவாங்குதல் சரியானதாக இருக்காது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தொகுதி மறுவரையறை மசோதாவை தி.மு.க எதிர்த்து வருகிறது. தென்மாநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மசோதா இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஆனால், பாஜக கொண்டு வரும் மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு அளித்துவிட்டது போல சமூக ஊடகங்களில் தொடர்ந்து அக்கட்சி விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் தி.மு.க ஆதரிக்கிறது என்று தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் தொகுதி மறுவரையறை மசோதா கொண்டுவரப்பட்ட போதே தற்போது உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டால் அதை மட்டும் ஆதரிப்பதாக தி.மு.க கூறியிருந்தது. இப்போதும் அதையே தி.மு.க நிர்வாகிகள் கூறி வருகின்றனர். டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் வெளிநடப்பு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவாவும் அதையே கூறியிருந்தார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook
ஆனால், திருச்சி சிவாவின் பேட்டியை தவறாக புரிந்துகொள்ளும் வகையில் தி.மு.க ஆதரிக்கிறது என்று தலைப்பிட்டு தந்தி டிவி நியூஸ் கார்டு வெளியிட்டிருந்தது. தலைப்பு தவறான அர்த்தத்தைத் தருகிறது என்று அறிந்த உடன் அதை அவர்கள் அகற்றியிருக்கிறார்கள். ஆனாலும் தி.மு.க-வை விமர்சிக்கும் கட்சியினர் இந்த நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டில் எந்த இடத்திலும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு என்று திருச்சி சிவா கூறியதாக குறிப்பிடவில்லை. தி.மு.க எதிர்காலத்தில் இந்த மசோதாவை ஏற்கலாம், நிராகரிக்கலாம்… ஆனால் தற்போது வரை ஏற்பதாக அல்லது ஆதரிப்பதாக அறிவிக்கவில்லை. “தற்போது உள்ள தொகுதி எண்ணிக்கையின் படி பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை திமுக ஆதரிக்கிறது” என்ற திருச்சி சிவாவின் பேட்டியை வைத்து ஒட்டுமொத்தமாக மசோதாவையே ஆதரிப்பது போன்று அர்த்தம் வரும் வகையில் நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தனர். திருச்சி சிவா அளித்திருந்த பேட்டியிலும் எந்த இடத்திலும் மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதாகக் கூறவில்லை. எனவே, மறுவரையறை மசோதாவை தி.மு.க ஆதரித்துவிட்டது என்று கூறப்படும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.
இது தொடர்பாக தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளரிடம் கேட்டோம். அவரும், “இந்த நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டது உண்மைதான். ஆனால், தலைப்பு தவறான புரிதலை ஏற்படுத்துகிறது என்று தெரிந்ததும் அதை நாங்கள் நீக்கிவிட்டோம்” என்றார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியைப் பழிவாங்குவதற்காக தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை தி.மு.க ஆதரிப்பதாகப் பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்போம் என்று திருச்சி சிவா கூறியதை மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


