ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் ரயில் மறியல் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் சிலர் ரயில் தண்டவாளத்தின் மீது நின்று ரயில் மறியலில் ஈடுபட்ட புகைப்படம் threads.com-ல் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராகுல்காந்தி கைதுக்கு இரயில் மறியல் போராட்டம்… தமிழ்நாடே அதிர்ந்தது…..  ” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

டெல்லியில் ‘நீட்’ தேர்வு முறைகேடு மற்றும் இளைஞர்கள் மீது தாக்குதல் நடந்த விவகாரத்தில், பிரதமர் மோடி பதவி விலகக்கோரி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராட்டம் பேரணி நடத்தினார். பிரதமர் இல்லம் நோக்கி பேரணியாக சென்றவர்களை காவல் துறையினர் கைது செய்தனர். ராகுல் காந்தியைப் பலவந்தமாக இழுத்துச் சென்று பேருந்தில் ஏற்றியபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அவரது மூக்கில் காயமும், கண் மற்றும் நெஞ்சுப் பகுதியில் லேசான காயங்களும் ஏற்பட்டதாகவும் மூக்கில் இருந்து ரத்தம் வந்ததாகவும் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியினர் திடீர் ரயில் மறியலில் ஈடுபட்டதாக நான்கு பேர் மட்டும் தண்டவாளத்தின் மீது நிற்கும் புகைப்படத்தை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தை தற்போதைய சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வரவே இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: hindutamil.in I Archive

இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படம் 2023ம் ஆண்டு வெளியாகி இருந்தது தெரிந்தது. பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவமதிக்கும் விதமாக கருத்துக்களைத் தெரிவித்த ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வதித்தது. இதைக் கண்டிக்கும் வகையில் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி மற்றும் மூன்று பேர் கும்பகோணம் ரயில் நிலையத்தில் திடீரென்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Archive

மேலும் இந்த போராட்டத்தை அப்போது தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையும் விமர்சித்து தன்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டிருந்ததையும் காண முடிந்தது. மூன்று பேருடன் ரயில் மறியலில் ஈடுபட்டது ஏன் என்று கே.எஸ்.அழகிரி அளித்திருந்த விளக்கமும் நமக்கு கிடைத்தது. அதில், “கும்பகோணத்திற்கு திருமண நிகழ்வுக்கு செல்லும் போது ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது தகுதி நீக்கம் குறித்த  தகவல் வந்த போது 4 பேருடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டேன்” என்று கூறியிருந்தார்.

இதன் மூலம் 2023ம் ஆண்டில் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டபோது நடந்த ரயில் மறியல் சம்பவத்தின் புகைப்படத்தை, 2026ல் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ரயில் மறியல் நடத்தப்பட்டது என்று தவறாக பகிர்ந்திருப்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2023ல் ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றம் தண்டனை வழங்கியதை கண்டித்து அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த அழகிரி ரயில் மறியல் போராட்டம் நடத்திய புகைப்படத்தை 2026ல் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து நடந்த ரயில் மறியல் என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் ரயில் மறியல் என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply