
கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளரிடம் மு.க.ஸ்டாலின் தோல்வியைத் தழுவுவார் என்று தந்தி டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்று கருத்துக் கணிப்பு செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை வைத்து புகைப்பட பதிவை உருவாக்கி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அதில் “கொளத்தூர் தொகுதியில் தவெக 41-47 சதவிகித வாக்கும், தி.மு.க 28 – 34 சதவிகித வாக்கும் வாக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த புகைப்படத்தின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில், “தந்தி டிவி கருத்துக் கணிப்பு படி அங்கிள் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியைத் தழுவுகிறார்” என்று மேலே எழுதப்பட்டிருந்தனர். இந்த படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தந்தி டிவி தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை தேர்தல் பிரசாரம் நிறைவடையும் கடைசி நாள் வரை வெளியிட்டிருந்தது. கடைசி நாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி பற்றிய முடிவை வெளியிட்டிருந்தது. அதில், மு.க.ஸ்டாலின் வெற்றி பெறும் வகையில் 41 முதல் 47 சதவிகித வாக்கு வாங்கும் என்று குறிப்பிட்டிருந்தது.
தந்தி டிவி-யின் செய்தியை மாற்றி, தவெக 41 முதல் 47 சதவிகிதம் வரை வாக்கு வாங்கும் என்று குறிப்பிட்டுள்ளனர். சமூக ஊடகங்களில் பரவும் இந்த கருத்துக் கணிப்பு தந்தி டிவி வெளியிட்டது இல்லை என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். தந்தி டிவி வெளியிட்ட கொளத்தூர் தொகுதிக்கான கருத்துக் கணிப்பை எடுத்து பார்த்தோம். அதில் தி.மு.க தான் 41 முதல் 47 சதவிகித வாக்க வாங்கும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உறுதி செய்துகொள்ள சமூக ஊடகங்களில் பரவும் நியூஸ் கார்டை தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு அனுப்பி வைத்தோம். அவரும் “இது போலியானது இதை தந்தி டிவி வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து தந்தி டிவி எக்ஸ் தள பக்கத்தில் சமூக ஊடகங்களில் பரவும் எடிட் செய்யப்பட்ட படத்தை தந்தி டிவி வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுப் பதிவு ஒன்றையும் வெளியிட்டனர். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவார் என்று வௌியான தந்தி டிவி கருத்துக் கணிப்பை எடிட் செய்து மாற்றி சமூக ஊடகங்களில் தவறாக பதிவிட்டுள்ளதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


