
தி.மு.க கூட்டணி 187 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று தந்தி டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டது போன்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி செய்தியை ஸ்கிரீன் ஷாட் எடுத்தது போன்று ஒரு புகைப்படம் ஃபேஸ்பக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026 – தந்தி டிவி கருத்துக் கணிப்பு. ஆட்சி அமைக்கப் போவது யார்? தி.மு.க 187 – 200 தொகுதிகள், அதிமுக 30 – 40 தொகுதிகள், தவெக 1-0 தொகுதிகள். திமுக 187 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பிரசாரம் நிறைவடைய உள்ள நிலையில், தி.மு.க கூட்டணி 187 இடங்களைக் கைப்பற்றும் என்று தந்தி டிவி செய்தி வெளியிட்டது போன்று பலரும் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு வருகின்றனர். தந்தி டிவி தன்னுடைய கருத்துக் கணிப்பை தற்போது வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தொகுதிகளின் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், ஒட்டுமொத்த முடிவு வெளியிட்டதாக செய்தி எதுவும் இல்லை.
தற்போது தந்தி டிவி வெளியிட்டு வரும் கருத்துக் கணிப்பைப் பார்க்கும் போது தி.மு.க – அ.தி.மு.க கூட்டணிகள் கிட்டத்தட்ட சம அளவில் வெற்றி பெறுவது போன்று உள்ளது. கூர்ந்து கவனிக்கும் போது அதிமுக கூட்டணிக்கு சற்று கூடுதலாக இடம் கிடைக்கும் என்பது போல உள்ளது. தற்போது வரை வெளியிட்டிருக்கும் கருத்துக் கணிப்பு அடிப்படையில் பார்த்தாலும் கூட 187 இடங்களில் தி.மு.க கூட்டணி வெல்லும் என்று கூற வாய்ப்பில்லை. எனவே, இது போலியானதாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இதை உறுதி செய்துகொள்ள தந்தி டிவி டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த புகைப்படத்தை வாட்ஸ் அப் மூலம் அனுப்பி உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் திமுக கூட்டணி 187 இடங்களில் வெல்லும் என்று தந்தி டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டதாக பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தி.மு.க கூட்டணி 187 இடங்களைக் கைப்பற்றும் என்று தந்தி டிவி கருத்துக் கணிப்பு வெளியிட்டது போன்று பரவும் புகைப்படம் போலியானது, இப்படி ஒரு கருத்துக் கணிப்பை தந்தி டிவி வெளியிடவில்லை என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


