பா.ம.க வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்கர்பச்சான், போட்டியிட மறுப்பு தெரிவித்துள்ளார் என்று ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: twitter.com I Archive

ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், "தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு! தன்னிடம் கேட்காமலே அறிவித்துள்ளார்கள்.கஞ்சிக்கே வழியில்லாத எனக்கு கட்சி எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளார்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் ரீபோஸ்ட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் தொகுதியில் பா.ம.க சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தங்கர் பச்சான் எதிர்ப்பு தெரிவித்தது போன்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். நியூஸ் கார்டை பார்க்க ஜூனியர் விகடன் வெளியிட்டது போன்று உள்ளதால் உண்மை என்றே கருதி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது உண்மையா என்று அறிய ஆய்வு செய்தோம். தங்கர் பச்சான் அப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என்று தேடிய போது நமக்கு அப்படி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஜூனியர் விகடன் இதை வெளியிட்டதா என்று அறிய அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்த்தோம். ஆனால் அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எந்த நியூஸ் கார்டும் இல்லை. பாமக சார்பில் இயக்குநர் தங்கர் பச்சான் போட்டி என்று நியூஸ் கார்டு இருந்தது. எனவே, ஜூனியர் விகடன் பொறுப்பாளரைத் தொடர்புகொண்டு கேட்டோம். அவரும் "இதை நாங்கள் வெளியிடவில்லை, போலியானது" என்று உறுதி செய்தார்.

இந்த நிலையில் தங்கர் பச்சான் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "கடலூர் மக்களவை தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடும் நான், போட்டியிட மறுப்பதாக வெளியான பொய் செய்தியை வன்மையாக கண்டிக்கிறேன்.

இவ்வாறான பொய்ச்செய்தியை வெளியிட்டவர்கள் யார் என கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்! - தங்கர் பச்சான்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு மற்றும் தகவல் தவறானது என்று உறுதியாகிறது

முடிவு:

தேர்தலில் போட்டியிட பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் மறுப்பு என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தங்கர்பச்சான் போட்டியிட மறுப்பு என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False