குழந்தைகளை துன்புறுத்தி விஜய் பிறந்தநாள் கொண்டாடிய தவெக-வினர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

துன்புறுத்தி விஜய் பிறந்தநாளைக் கொண்டாடிய தவெக-வினர் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சாகச நிகழ்ச்சியின் போது சிறுவனின் கையில் தீப்பற்றிக்கொள்ளும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இதெல்லாம் தேவையாடா உங்களுக்கு… சோறு, இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கடா…

பிறந்தநாள் பார்த்து கொண்டாடுங்கடா..

குழந்தைகளை துன்புறுத்தி கொண்டாடும் தற்குறிகள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளை ஜூன் 22ம் தேதி அவரது கட்சியினர் உற்சாகமாகக் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியின் போது சிறுவர்களை துன்புறுத்தியதாக ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை. இதனால், தற்போது நடந்தது போன்று அர்த்தம் வரும் வகையில் பதிவு உள்ளது. 

ஆனால், இந்த வீடியோவை சில ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போன்ற நினைவு இருந்ததால் இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். இந்த பதிவில் குழந்தைகளை சித்ரவதை செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஓடுகளை உடைக்கும் ஸ்டண்ட் சாகச நிகழ்ச்சியில் இதெல்லாம் வழக்கமான ஒன்றுதான். குழந்தையை கட்டாயப்படுத்தி, துன்புறுத்தி நிகழ்ச்சி நடத்தியது போல இல்லை. எனவே இந்த நிகழ்ச்சி தொடர்பாக தேடினோம்.

நம்முடைய தேடலில் இந்த சம்பவம் 2024ம் ஆண்டு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்தது என்று தெரியவந்தது. சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்ட சிறுவனுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாக செய்திகள் கிடைத்தன. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் வழக்கு பதிவு செய்ததாக எந்த செய்தியும் இல்லை.

உண்மைப் பதிவைக் காண: news18.com I Archive

அந்த சிறுவனின் பேட்டியை நியூஸ் 18 தமிழ்நாடு 2024ம் ஆண்டே வெளியிட்டிருந்தது. அதில், “15 உலக சாதனை செய்துள்ளேன், இந்த முறை ஸ்பார்க் ஆகியதால் தீப்பற்றியது, இது சகஜம் தான், வலி குறைவாக உள்ளது, ஓடு மற்றும் கைகளில் பெட்ரோல் ஊற்றுவது வழக்கமான ஒன்று தான் என்று அந்த சிறுவன் தெரிவித்துள்ளார்” என்று இருந்தது. இதன் மூலம் இது பழைய சம்பவம் என்பதை குறிப்பிடாமல் தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு உண்மையை மறைத்து வெளியிடப்பட்டது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2024ம் ஆண்டு விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த சிறுவன் ஒருவனின் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தின் வீடியோவை தற்போது நடந்தது போன்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்த வருவதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: குழந்தைகளை துன்புறுத்தி விஜய் பிறந்தநாள் கொண்டாடிய தவெக-வினர் என்று பரவும் வீடியோ தற்போது எடுக்கப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply