காங்கிரஸ் எம்.பி-க்களுடன் துக்ளக் குருமூர்த்தி சந்திப்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியை காங்கிரஸ் எம்.பி-க்கள் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசியது போலவும், மாணிக்கம் தாகூரை இயக்குவதே குருமூர்த்திதான் என்றும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

காங்கிரஸ் எம்.பி-க்கள் கே.சி.வேணுகோபால், மாணிக்கம் தாகூர் ஆகியோர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளனர். அந்த நபர் யார் என்று சரியாகத் தெரியவில்லை. நிலைத் தகவலில், “எழுத்து இயக்கம் குருமூர்த்தி* *RSS தலைமையிடம்* *ஹல்லோ மாணிக்கம் தாகூர்* *மாணிக்கம் தாகூர்* *சொல்லுங்க எசமான்* *கவனமா கேட்டுக்கோ* *1,காங்கிரஸ் திமுக கூட்டணியை, உடைக்கனும்,*

*2, அதற்கு, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு கேட்கனும்,*

*3, MLA தொகுதி 40% கேட்டு வாங்கனும்,*

*4, MLA 80 தொகுதிக்கு குறையாமல் வாங்கி விட்டு,*

*5, காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு, ஒவ்வொரு வேட்பாளருக்கும், தலா ரூ 200 கோடி அள்ளி கொடுப்போம்,* *ரூ 200 ஐ எப்போ சம்பாதிக்க போராங்க,*

*6, காங்கிரஸ் வேட்ப்பாளர்கள் தோற்க வேண்டும்,* *அது தான் 80 பேருக்கும், ஒவ்வொருவருக்கும், தனித் தனியாக ரூ 200 கோடி கொடுத்தாச்சே! பிறகு என்ன?*

*7, அந்த 80 MLA களும், பிஜேபி – அதிமுக என்று ஆகி விடும்.*

*8, இன்னும் 40 MLAகளை, விரட்டி, விரட்டி, மிரட்டி, மிரட்டி, ஒரே குருப்பாக, தாவித் தாவி, பிஜேபி பக்கம் வந்து விடுவார்கள் எப்படி திட்டம்,*

*9, சரிங்க எசமான் (என்றான் மாணிக்கம் தாகூர் ). *10, RSS தலைமையிடம்,* *மாணிக்கம் தாகூர் அப்புறம் நீ தான், “மாண்புமிகு துணை முதலமைச்சர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, மாணிக்கம் தாகூரை இயக்குவதே ஆர்.எஸ்.எஸ்-ல் தொடர்புடைய குருமூர்த்திதான் என்பது போலவும் அதற்கான சந்திப்பு நடந்தது போலவும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

கூட்டணி ஆட்சி இல்லை என்று தி.மு.க தெளிவாக கூறிய பின்பும், ஆட்சியில் பங்கு என்று கூறி தி.மு.க கூட்டணியில் குழப்பத்தை நிலவச் செய்து வருபவர் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மாணிக்கம் தாகூர். அவர் பா.ஜ.க தூண்டுதலின் பெயரில் இப்படி செய்து வருவதாக இணையத்தில் தி.மு.க ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். அதற்கு ஆதாரம் கிடைத்தது போல, ஆடிட்டர் குருமூர்த்தியை மாணிக்கம் சந்தித்துப் பேசினார் என்று அர்த்தம் வரும் வகையில் சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

படத்தில் பார்க்கும் மூன்றாவது நபரின் முகம் சரியாகத் தெரியவில்லை. சாயலில் சற்று குருமூர்த்தி போல இருந்தாலும், அது அவர் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவர் குருமூர்த்தியா இல்லையா என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். இந்த புகைப்படத்தை கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த புகைப்படத்தை பதிவிட்டவரே மாணிக்கம் தாகூர்தான் என்று தெரியவந்தது. நாடாளுமன்றத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் போராட்டம் நடந்தபோது என்று குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். ஆனால், படத்தில் உள்ளவர் யார் என்று குறிப்பிடவில்லை.

Archive

போராட்டம் தொடர்பாக வீடியோ கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடக பக்கத்தில் இந்த போராட்டத்தின் வீடியோ வெளியாகி இருந்தது. அதில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் பிங்க் நிற நேரு கோட் அணிந்திருந்த நபரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது. அவர் யார் என்று தேடினோம்.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அக்கட்சியின் எம்.பி-க்களின் புகைப்படங்களுடன் பட்டியல் வெளியிட்டுள்ளனர். அதில் தேடியபோது, அது கேரள மாநிலம் காசர்கோடு நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராஜ்மோகன் உன்னிதான் என்பது தெரியவந்தது. 

Archive

தொடர்ந்து தேடிய போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்று எக்ஸ் தளத்தில் வெளியான பதிவுக்கு குருமூர்த்தியே மறுப்பு தெரிவித்துப் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில் அவர், “என் தலையில் இப்போது கிட்டத்தட்ட 80% முடி இல்லாமல் உள்ளது. ஆனால் (எண்ணுடையதாகக் காட்டப்பட்டுள்ள புகைப்படத்தில் இருக்கும்) உன்னிதான் போல எனக்கும் ஒருகாலத்தில் இவ்வளவு முடி இருந்தது. இவர்கள் யாரும் அரசியலில் வருவதற்கு 20 ஆண்டுகள் முன்பே எனக்கு இத்தனை முடி இருந்தது. இந்த முட்டாள், என்னுடைய போலி புகைப்படத்தைக் காட்டும்போது கூட கொஞ்சம் நல்ல புகைப்படத்தைக் கூட தேர்வு செய்யவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். 

இதன் மூலம் புகைப்படத்தில் இருப்பது தான் இல்லை காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதான் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ஆதாரங்கள் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதானுடன் மாணிக்கம் தாகூர் மற்றும் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருந்த புகைப்படத்தை ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு என்று தவறாக சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Avatar

Title:காங்கிரஸ் எம்.பி-க்களுடன் துக்ளக் குருமூர்த்தி சந்திப்பு என்று பரவும் புகைப்படம் உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

Leave a Reply