
காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று திருமாவளவன் கூறியதாக ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் கூறியது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “”தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் ஜெயிக்க வாய்ப்பில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
சமீபத்தில் பேட்டி அளித்த தொல் திருமாவளவன், பாரதிய ஜனதா கட்சியை விமர்சித்து பேசினார். கடைசியில் பாஜக என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக காங்கிரஸ் ஒரு இடத்திலும் ஜெயிக்காது என்றார். பின்னர் சுதாரித்துக்கொண்ட அவர், பாஜக இரு இடத்திலும் ஜெயிக்காது என்றார். இந்த வீடியோவை முழுமையாக வெளியிடாமல் தங்களுக்கு தேவையான பகுதியை மட்டும் கத்தரித்து சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க வாய்ப்பில்லை என்று தொல் திருமாவளவன் கூறிய பேட்டி வீடியோவை பாலிமர் தொலைக்காட்சியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்து எடுத்தோம். அதில் கூட, ” பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து விட்டு காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என பேட்டி கொடுத்த திருமாவளவன்.. ” சட்டெனத் திரும்பி பார்த்த விசிக தொண்டர்கள்..” என்று குறிப்பிட்டிருந்தனர்.
வீடியோவை பார்க்கும் போது, டெல்லி நாடாளுமன்றத் தொகுதி தொடர்பாக அவர் கூறியதை காண முடிந்தது. வீடியோவின் தொடக்கத்திலேயே, “அங்கு ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வர வாய்ப்பில்லை” என்று தொல் திருமாவளவன் கூறுகிறார். பின்னர் அருகிலிருந்த தொண்டர்கள் எடுத்துக்கொடுக்கவே, “மன்னிக்க வேண்டும். பிஜேபி வர வாய்ப்பில்லை” என்று கூறுகிறார். அதன் பிறகு முழு பேட்டியையும் வெளியிட்டிருந்தனர்.
ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் வர வாய்ப்பில்லை என்று தொல் திருமாவளவன் கூறியது உண்மைதான். ஆனால், பாஜக வர வாய்ப்பில்லை என்று கூறுவதற்குப் பதில் காங்கிரஸ் என்று தவறாகக் கூறிவிட்டார். ஆனால், அவரே மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டு, பாஜக ஒரு இடத்தில் கூட வர வாய்ப்பில்லை என்று தெளிவுபடுத்திவிட்டார். முழு வீடியோவை வெளியிட்டிருந்தால் குழப்பம் வந்திருக்காது. குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெளியிட்டதால் தவறான புரிதல் ஏற்படுகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு எடிட் செய்யப்பட்டது முழுமையானது இல்லை என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
டெல்லியில் பாஜக ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காது என்று கூறுவதற்கு பதில் காங்கிரஸ் ஜெயிக்காது என்று திருமாவளன் தவறுதலாக கூறிய காட்சியை மட்டும் தனியாக எடுத்து தவறுக்கு மன்னிப்பு கேட்ட பகுதியை நீக்கி எடிட் செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது என்று திருமாவளவன் கூறியது உண்மையா?
Written By: Chendur PandianResult: Misleading
