
ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி தொண்டர்கள் அமைத்த மனித பிரமிடு என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பூரி ஜெகந்நாதர் தேரோட்டத்தின் போது பக்தர்கள் மனித பிரமிடு ஏற்படுத்தியது போன்று வீடியோ ஒன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “புரி ரத யாத்திரையின் போது ஆர்.எஸ்.எஸ் சேவாபாரதி தொண்டர்கள் அமைத்த மனித பிரமிட்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஒடிசா மாநிலம் பிரபலமான பூரி ஜெகந்நாதர் கோவில் தேரோட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் பிரம்மாண்ட மனித பிரமிடு அமைத்ததாக வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவை பார்க்கும் போது உண்மையானது போல இல்லை. கட்டுக்கடங்காத கூட்டம் செயற்கையாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது போல இருந்தது. ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் இந்த மனித பிரமிடைச் செய்தனர் என்று குறிப்பிட்டிருந்ததால் இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
முதலில் தேரோட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் மனித பிரமிடு நடந்ததா… அது தொடர்பாக செய்தி, வீடியோ ஏதும் வெளியாகி உள்ளதா என்று தேடிப் பார்த்தோம். நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. ரதயாத்திரையின் நேரடி ஒளிபரப்பைப் பல ஊடகங்களும் செய்திருந்தன. தூர்தர்ஷன் யூடியூபில் செய்திருந்த நேரடி ஒளிபரப்பைப் பார்த்தோம். அதில் மனித பிரமிடு எதுவும் உருவாக்கப்படவில்லை. இவை எல்லாம் ஜெகந்நாதர் தேரோட்டத்தின் போது ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் சார்பில் மனித பிரமிடு ஏற்படுத்தப்பட்டதாகப் பரவும் தகவல் தவறானது என்பதை உறுதி செய்தன.

உண்மைப் பதிவைக் காண: instagram.com I Archive
நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் bharathfx1 என்ற இன்ஸ்டாகிராம் ஐடி இருந்தது. அந்த ஐடி-க்கு சென்று பார்த்த போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ பதிவிடப்பட்டிருந்ததைக் கண்டோம். மிகவும் தெளிவாக அந்த வீடியோ இருந்தது. வீடியோ பற்றி சிறுகுறிப்பையும் வெளியிட்டிருந்தனர். அதில், “இந்த ரீல்ஸ்ல் நீங்கள் காணும் புகைப்படம்/வீடியோ முழுமையாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது. எங்கள் நோக்கம் யாரையும் புண்படுத்துவது அல்ல. இது பொழுதுபோக்கு நோக்கிற்காக உருவாக்கப்பட்டது. இதில் இடம் பெற்ற காட்சிகளை நீங்கள் நேரடியாக செய்ய முயல வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் இந்த வீடியோவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதுதான் என்பது உறுதியானது.

அடுத்ததாக ஏஐ புகைப்படங்களைக் கண்டறிய உதவும் சில இணையதளங்களில்(hivedetect.ai) இந்த வீடியோவை பதிவேற்றித் தேடினோம். அவையும் இந்த வீடியோ முழுக்க முழுக்க ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதுதான் என்று உறுதி செய்தன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், பூரி ஜெகந்நாதர் தேரோட்டத்தின் போது மிக பிரம்மாண்ட மனித பிரமிடை ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் உருவாக்கினார்கள் என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பூரி ரதயாத்திரையின் போது மனித பிரமிடு அமைத்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் என்று பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


