நாம் தமிழர் கட்சியை கலைக்கப் போகிறேன் என்று சீமான் கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

நாம் தமிழர் கட்சியைக் கலைக்கப் போகிறேன் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீமான் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மக்களுக்காக போராடி பத்து ஆண்டுகள் வீண். மக்கள் திருந்துவதாக இல்லை, நான் திருந்தப் போகிறேன் ஆம் கட்சியை கலைக்கப்போகிறேன் – சீமான்” என்று இருந்தது.

இந்த பதிவை Aravind Vck என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 பிப்ரவரி 22ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை பகிர்ந்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மிக குறைந்த அளவில் வெற்றி பெற்றுள்ளன. முதன் முறையாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் வெற்றி பெற்றிருப்பதை அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியை கலைக்கப்போகிறேன் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

உண்மையில் சீமான் இப்படி எந்த ஒரு பேட்டியையும் அளிக்கவில்லை. இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் இல்லாத சூழலில் தந்தி டிவி நியூஸ் கார்டை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

முதலில் தந்தி டிவி இப்படி நியூஸ் கார்டு வெளியிட்டதா என்று அறிய தந்தி டிவி பிப்ரவரி 22, 23ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் பார்வையிட்டோம். அதில் இப்படி எந்த ஒரு நியூஸ் கார்டும் இல்லை. எனவே, தந்தி டிவி டிஜிட்டல் பிரிவைத் தொடர்புகொண்டு இது போலியானது என்று உறுதி செய்துகொண்டோம்.

நாம் தமிழர் கட்சியின் செயற்களம் அமைப்பின் தலைமைப் பொறுப்பாளரும், மாநில ஐ.டி விங் செயலாளருமான ஜெகந்நாதனும் இது போலியான நியூஸ் கார்டு என்று உறுதி செய்தார். இதன் அடிப்படையில் நாம் தமிழர் கட்சியை கலைக்கப்போகிறேன் என்று சீமான் கூறியதாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாம் தமிழர் கட்சியைக் கலைக்கப் போவதாக சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:நாம் தமிழர் கட்சியை கலைக்கப் போகிறேன் என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False