
ரஷ்யா – கனடா இடைப்பட்ட பகுதியில் தோன்றும் நிலாவின் வீடியோ என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
நிலா மிக நெருக்கமாக, மிகப் பெரியதாக தெரியும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. ஒரு சில விநாடிகள் மட்டும்தான் நிலவு வருகிறது. வந்த வேகத்தில் மறைந்துவிடுகிறது. நிலைத் தகவலில், “ரஷ்யா கனடா இடையே சந்திரன் இது பெரியதாக தோன்றுகிறது மற்றும் சுமார் 30 வினாடிகளில் மறைந்துவிடும் .. என்ன ஒரு பார்வை ..” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவை Vinohemnath Gounder என்பவர் 2021 மே 27ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2021 மே மாதத்தின் இறுதியில் சூப்பர் மூன் எனப்படும் நிலா, வழக்கத்தை விட சற்று பெரிதாக தெரியும் நிகழ்வு நடந்தது. இதைத் தொடர்ந்து நிலா மிகப்பெரிய அளவில் தெரிந்ததாக பல வீடியோக்கள் சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இது தொடர்பாக நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலப் பிரிவு சார்பில் 2021 மே 27ம் தேதியே உண்மை கண்டறியும் ஆய்வு நடத்தப்பட்டது.
தமிழிலும் பலரும் இதை பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ உள்பட பல வட இந்திய ஊடகங்களும் உண்மை கண்டறியும் ஆய்வை நடத்தி வெளியிட்ட செய்திகள் தான் வரிசையாக கிடைத்தது. அதைத் தொடர்ந்து ட்விட்டரில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருவதை காண முடிந்தது.
இவற்றுக்கு இடையே நீண்ட தேடலுக்குப் பிறகு HoaxEye என்ற ட்விட்டர் பதிவு கிடைத்தது. அதில், இந்த வீடியோ போலியானது. வி.எஃப்.எக்ஸ் போன்ற கிராஃபிக்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கலாம். இதை யார் தயாரித்தார்கள் என்பதுதான் தெரியவில்லை, என்று குறிப்பிட்டிருந்தனர். மேலும், ஒரு யூடியூப் வீடியோ இணைப்பையும் வழங்கியிருந்தனர்.
அது கிட்டத்தட்ட நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிலவு வீடியோ போல இருந்தது. அதாவது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் விண்வெளி ஆய்வு நிறுவனம் இருக்கும் இடத்தில் நிலா, சனி கிரகம் இருந்தால் எப்படி இருக்கும் என்று குறிப்பிட்டு 2013ம் ஆண்டு பதிவிடப்பட்டிருந்தது.
இது தவிர வேறு சில டிக்டாக் லிங்க் கிடைத்தது. அவற்றை நம்மால் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலம் வெளியிட்ட கட்டுரையிலிருந்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டோம். அதில் டிக்டாக்கில் “Aleksey” என்ற ஐடி-யில் ஒருவர் இந்த வீடியோ தன்னுடையது என்று குறிப்பிட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்து, அவரைத் தொடர்புகொண்டு பேசினர்.
அப்போது அவர், இந்த வீடியோ டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது, 2021 மே 17ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.
அவருடைய ஐ.டி அடிப்படையில் ட்விட்டரில் அவருடைய ஐடி-யை தேடி எடுத்தோம். மே 30ம் தேதி அவர் வெளியிட்டிருந்த பதிவில் இந்த வீடியோவை உருவாக்கிய நான் இதை Smaugs NFT-யிடம் விற்றுவிட்டேன் என்று குறிப்பிட்டிருந்தார். அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
ரஷ்யா – கனடா இடையே தோன்றும் நிலாவின் தோற்றம் என்று பகிரப்படும் வீடியோ, கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:ரஷ்யா – கனடா இடையே தோன்றும் நிலாவின் வீடியோவா இது?
Fact Check By: Chendur PandianResult: False
