
மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ வாசகர் ஒருவர் வீடியோ ஒன்றை அனுப்பி அது உண்மையா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்த வீடியோவை பார்த்தோம். இளைஞர் ஒருவர் மயக்கம் காரணமாக படியில் வந்து அமர்ந்து, பின்னர் சுருண்டு விழுந்து உயிரிழக்கும் சிசிடிவி காட்சி அது; சமீபத்தில் உயிரிழந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் இறுதி நிமிட சிசிடிவி காட்சி இது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஃபேஸ்புக்கில் இந்த வீடியோ பகிரப்படுகிறதா என்று பார்த்தோம். “கன்னட சூப்பர் ஸ்டார் புனித்ராஜ்குமார் இறுதி நிமிட CCTV” என்று குறிப்பிடப்பட்ட வீடியோவை சிலர் பகிர்ந்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Facebook I Archive
உண்மை அறிவோம்:
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் திடீர் இதயத்துடிப்பு முடக்கம் காரணமாக உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியாகின. இந்த சூழலில் அவரது இறுதி நிமிடங்கள் என்று ஒரு வீடியோவை சிலர் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். இதே வீடியோவை சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் இந்தி பிரபலம் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த போதும் பரவியது.
எனவே, இந்த வீடியோ புனித் ராஜ்குமாருடையது இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்தினோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி இந்த வீடியோவை சிலர் ட்விட்டரில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. அதில், பெங்களூருவில் 33 வயதான இளைஞர் ஜிம் பயிற்சி செய்த நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. அவரது கடைசி நிமிடங்கள் சிசிடிவி-யில் பதிவானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இது தொடர்பாக தேடிய போது யூடியூபில் வெளியான சில வீடியோக்களும் நமக்கு கிடைத்தன. அந்த வீடியோவில் இந்த வீடியோ 2021 ஆகஸ்ட் 25ம் தேதி பதிவாகி இருப்பதை தெளிவாகக் காண முடிந்தது.

அசல் பதிவைக் காண: YouTube 1 I YouTube 2
புனித் ராஜ்குமார் மரணம் அடைந்தது 2021 அக்டோபர் 29ம் தேதி. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ அதற்கு சில மாதங்களுக்கு முன்பு இருந்தே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி ட்விட்டரில் வெளியான வீடியோவும் நமக்குக் கிடைத்துள்ளது.
இதன் மூலம் சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவில் இளைஞர் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த வீடியோவை புனித் ராஜ்குமார் உயிரிழந்த காட்சி என்று தவறான தகவல் சேர்த்து சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிட சிசிடிவி கேமரா காட்சி என்று பரவும் வீடியோ கடந்த வேறு ஒரு நபருடையது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கடைசி நிமிடம் என்று பரவும் தவறான வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False
