தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி கூறினாரா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

உதயநிதி ஸ்டாலின் புகைப்படத்துடன் கூடிய தந்தி டிவி நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “மகளிர் அணி கட்சியில் செயல்படுவதே இல்லை. இளம் பெண்களை இளைஞர் அணியில் சேர்ப்பதில் தவறு எதுவும் இல்லை. மகளிர் அணி செய்ய தவறியதை தான் நான் செய்கிறேன். திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை Dhamotharan P என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2022 ஜனவரி 4ம் தேதி பதிவிட்டுள்ளார். இவரைப் போல பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

அசல் பதிவைக் காண: Twitter I Archive

ட்விட்டரில் இந்த பதிவை பா.ஜ.க பிரமுகர் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ளார். இதை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

திமுக மகளிரணி செயலாளராக இருப்பவர் கனிமொழி. உதயநிதி ஸ்டாலினுக்கு அத்தை ஆவார். கனிமொழிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்தது போலவும், தி.மு.க-வுக்குள் மோதல் ஏற்பட்டுள்ளது போன்றும் இந்த நியூஸ் கார்டை பலரும் பகிர்ந்து வருகின்றனர். பா.ஜ.க பிரமுகரும் சினிமா பிரபலமுமான காயத்ரி ரகுராமும் இதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

இந்த நியூஸ் கார்டில் ஜனவரி 2, 2022 அன்று வெளியானதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. எனவே, தந்தி டிவி கடந்த ஜனவரி 2ம் தேதி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை பார்வையிட்டோம். அப்போது, உதயநிதி ஸ்டாலின் தொடர்பாக எந்த ஒரு நியூஸ் கார்டும் நமக்குக் கிடைக்கவில்லை. தொடர்ந்து தேடிய போது, இதே போன்ற நியூஸ் கார்டை கடந்த டிசம்பர் 26, 2021 அன்று தந்தி டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது.

ஆனால், அதில், “அமைச்சர் பதவிக்கு ஆசை இல்லை. அமைச்சர் பதவி போன்ற எந்த பொறுப்பிற்கும் எனக்கு ஆசை இல்லை. திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது.

அசல் பதிவைக் காண:  Facebook

இது தொடர்பாக தந்தி டிவி-யில் விசாரித்த போது இது போலியானது என்று தெரிவித்தனர். அதன் பின்னர் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று பதிவையும் வெளியிட்டனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.

உதயநிதி ஸ்டாலின் வேறு எங்காவது இப்படி பேசினாரா, அது தொடர்பாக செய்தி ஏதும் வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். நமக்கு எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை. எனவே, உதயநிதி ஸ்டாலின் உதவியாளர் செந்தில்குமாருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி உண்மையா என்று கேட்டோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இதன் மூலம் திமுக மகளிர் அணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி ஸ்டாலின் கூறியதாக பரவும் தகவல் மற்றும் நியூஸ் கார்டு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக மகளிரணி செயல்படவில்லை என்று உதயநிதி கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:தி.மு.க மகளிரணி செயல்படுவதே இல்லை என்று உதயநிதி கூறினாரா?

Fact Check By: Chendur Pandian 

Result: False