தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காவல் துறையில் பணியாற்றிய போது துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் அவமானப்பட்டதாக ஒரு வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

காவல் துறை அதிகாரி ஒருவர் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், "கர்நாடக அ'சிங்கமா'ப்போச்சு மல" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வீடியோ பதிவை surya xavier (@suryaxavier1) என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் 2023 மார்ச் 2ம் தேதி பதிவிட்டிருந்தார். இதை பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

சில மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச போலீஸ் அதிகாரி ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர்களை துப்பாக்கியைப் பயன்படுத்தும் முறை பற்றி கேள்வி எழுப்பினார். அவர்கள் துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் திணறியது போன்று செய்தி வெளியானது. ஆனால், அந்த அதிகாரிகள் சரியாகத்தான் துப்பாக்கியை கையாண்டனர் என்று பின்னர் உத்தரப் பிரதேச போலீஸ் தரப்பில் இருந்து விளக்கமும் அளிக்கப்பட்டது. அந்த வீடியோவை எடுத்து அண்ணாமலைக்கு அசிங்கமாகப் போய்விட்டது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது உத்தரப்பிரதேசத்தில் நடந்ததுதான், வீடியோவில் இருப்பது அண்ணாமலை இல்லை என்பதை உறுதி செய்ய பழைய வீடியோவை தேடி எடுத்தோம். என்.டி.டி.வி உள்ளிட்ட ஊடகங்கள் இந்த வீடியோவை வெளியிட்டிருப்பது தெரிந்தது. அவற்றில் இந்த நிகழ்வு உத்தரப்பிரதேசத்தில் நடந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மைப் பதிவைக் காண: ndtv.com I Archive 1 I abplive.com I Archive 2

செய்தி ஊடகங்கள் மட்டுமின்றி, ஆம் ஆத்மி உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் கூட இந்த வீடியோவை பதிவிட்டு உத்தரப்பிரதேச அரசை விமர்சித்திருப்பது தெரிந்தது. அதற்கு உத்தரப்பிரதேச போலீஸ் தரப்பில் இருந்து மறுப்பு ட்வீட் பதிவு வெளியிடப்பட்டிருப்பதும் நமக்குக் கிடைத்தன.

இந்த சம்பவம் 2022 டிசம்பரில் நடந்தது. ஆனால், அண்ணாமலை 2019ம் ஆண்டிலேயே ஐபிஎஸ் பணியிலிருந்து விலகினார். இதன் மூலம் வீடியோவில் இருப்பது அண்ணாமலை இல்லை என்பதும் விஷமத்தனமாக வதந்தி பரப்பப்பட்டுள்ளது என்பதும் உறுதியாகிறது.

முடிவு:

உத்தரப்பிரதேசத்தில் காவல் துறை அதிகாரிகள் துப்பாக்கியை பயன்படுத்தத் தெரியாமல் திணறிய வீடியோவை எடுத்து வீடியோவில் இருப்பது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:துப்பாக்கியைப் பயன்படுத்தத் தெரியாமல் தடுமாறிய அண்ணாமலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False