அடையாறு ஆனந்த பவன் முஸ்லீம் நபருக்கு விற்பனை செய்யப்பட்டதா?

அரசியல் | Politics சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’அடையாறு ஆனந்த பவனை முஸ்லீம் நபர் வாங்கியுள்ளார். ஹிந்துக்கள் மற்றும் சுத்த சைவ உணவுப் பிரியர்கள் கவனிக்கவும்,’’ என்று கூறி சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல் ஒன்றின் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

இதனை வாசகர் ஒருவர் நமக்கு வாட்ஸ்ஆப் (+91 9049044263) வழியே அனுப்பி, உண்மையா என கேட்டிருந்தார்.

இதனை ஃபேஸ்புக் பயனாளர்களும் ஷேர் செய்வதைக் கண்டோம்.

Facebook Claim Link I Archived Link

உண்மை அறிவோம்:
மேற்குறிப்பிட்ட தகவல் உண்மையா என உறுதிப்படுத்தும் வகையில், நேரடியாக நாம் அடையாறு ஆனந்த பவன் இணையதள முகவரியில் (https://aabsweets.com) தரப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம்.

நம்மிடம் பேசிய அடையாறு ஆனந்த பவன் ஊழியர் ஒருவர், ‘’இது அடிப்படை ஆதாரமற்ற வதந்தி. எங்கள் நிறுவனத்தை முஸ்லீம் யாரும் வாங்கவில்லை. சந்தேகம் இருந்தால் எங்களது நிறுவனம் பற்றி சமீபத்தில் ஊடகங்களில் வெளியான செய்திகள் அல்லது எங்களது நிறுவன இயக்குனர்கள் பற்றி அரசு இணையதளங்களில் கிடைக்கப்பெறும் ஆவணங்களை வைத்து சரிபார்த்துக் கொள்ளுங்கள்,’’ என்றார்.

இதன்பேரில் நாம், மத்திய அரசின் Ministry of Corporate Affairs இணையதளம் சென்று பார்த்தோம். அடையாறு ஆனந்த பவன், இந்திய கம்பெனிகள் சட்டத்தின் கீழ் பதிந்துள்ள U15490TN2009PTC071449 என்ற பதிவெண் அடிப்படையில் நமக்கு கிடைத்த விவரம், அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் யாரும் முஸ்லீம்கள் இல்லை என்பதுதான்.

இது மட்டுமின்றி மிகச் சமீபத்தில் 18.04.2022 அன்று டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம், ஸ்ரீனிவாசா ராஜா என்பவரை அடையாறு ஆனந்த பவன் இயக்குனர் எனக் குறிப்பிட்டு செய்தி ஒன்றை வெளியிட்டிருந்ததைக் கண்டோம். அதனையும் கூடுதல் ஆதாரத்திற்காகக் கீழே இணைத்துள்ளோம்.

TOI Link

இதன்படி, திருப்பதி ராஜா என்பவரால் தொடங்கப்பட்ட அடையாறு ஆனந்த பவனை தற்போது அவரது மகன்கள், வெங்கடேசன் மற்றும் ஸ்ரீனிவாசா ராஜா ஆகியோர் நேரடியாக நிர்வகிக்கின்றனர். இதில், ஸ்ரீனிவாச ராஜா பெயரே மேற்கண்ட டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரையில் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், ‘அடையாறு ஆனந்த பவனை முஸ்லீம்கள் யாரும் விற்பனைக்கு வாங்கவில்லை; வேண்டுமென்றே மத ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கில் சிலர் இத்தகைய வதந்தியை பரப்பி வருகின்றனர்,’ என சந்தேகமின்றி உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட தகவல் நம்பகமானது இல்லை என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர…

Facebook Page I Twitter Page I Google News Channel I Instagram

Avatar

Title:அடையாறு ஆனந்த பவன் முஸ்லீம் நபருக்கு விற்பனை செய்யப்பட்டதா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False