
ராஜஸ்தானில் பாஜக ஆட்சியில் தினந்தோறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் கடத்தப்பட்டு வருகிறார்கள் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
இளம் பெண் ஒருவரை சிலர் காரில் கடத்திச் செல்லும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ராஜஸ்தானில் பட்டப்பகலில் நாள்தோறும் கடத்தப்படும் பெண்கள் சிறுகுழந்தைகள்…!! பெரும்பாலும் கடத்தப்படும் பெண்கள் பார்பன்னரல்லாத பெண்கள் குழந்தைகள் தான்…!!
மக்கள் விரோதி பாஜக அரசை தூக்கி எறியவேண்டும்….!” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ராஜஸ்தான் மாநிலத்தில் குறிப்பிட்ட சாதியினரைத் தவிர்த்து இதர சமூகத்தைச் சார்ந்த சிறுமிகள், இளம் பெண்கள் தினமும் கடத்தப்படும் சூழல் உள்ளதாக வீடியோ ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு அந்த மாநிலத்தில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சிதான் காரணம் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த கடத்தல் சம்பவம் ராஜஸ்தானில் நடந்தது இல்லை, குஜராத்தில் நடந்தது என்பது தெரியவந்தது. அங்கேயும் பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சி செய்கிறது என்பதால் இந்த சம்பவத்தின் பின்னணி தெரிந்துகொள்ள ஆய்வை தொடர்ந்தோம்.
இந்த கடத்தல் தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட பல ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், வீட்டைவிட்டு வெளியேறி வேறு ஒருவருடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்த தன்னுடைய மகளை சொந்த தந்தையே கடத்தினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
குஜராத் மாநிலம் ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய காதலரை நட்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த திருமணத்திற்கு பிறகும் இருவரும் அவரவர் இல்லத்தில் வசித்து வந்துள்ளனர். தன்னுடைய மகள் திருமணம் செய்துகொண்டார் என்று கேள்விப்பட்ட தந்தை, காதலனையும் அவரது குடும்பத்தினரையும் மிரட்டியுள்ளார். இந்த நிலையில் அந்த பெண் தன் வீட்டைவிட்டு வெளியேறி காதலருடன் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காதலனின் தாயாருக்கு சொந்தமான கடையில் இந்த பெண் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் தந்தை மற்றும் சிலர் சேர்ந்து அவரை காரில் கடத்தி சென்றனர்.

உண்மைப் பதிவைக் காண: timesofindia I Archive
சிசிடிவி கேமரா வீடியோ அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கடத்தப்பட்ட பெண் மற்றும் அவரது தந்தையை தேடி வருகின்றனர். கடத்தியவர்களை கண்டறிய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்று ஆரவல்லி டிஎஸ்பி மனோகர்சிங் ஜடேஜா கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது. நம்முடைய ஆய்வில் குஜராத்தில் குடும்ப பிரச்னை காரணமாக தந்தையே தன் மகளை கடத்தியிருப்பது உறுதியாகிறது.
இதன் மூலம் ராஜஸ்தானில் குறிப்பிட்ட சமூகத்தைத் தவிர்த்து மற்ற சமூக பெண்கள் தினமும் கடத்தப்படுகிறார்கள் என்று பரவும் தகவல் விஷமத்தனமானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
குஜராத்தில் காதல் திருமணம் செய்த தன் மகளை தந்தையே கடத்திய வீடியோவை வைத்து ராஜஸ்தானில் பிராமண சமூகத்தைத் தவிர்த்து இதர சமூக பெண்கள், சிறுமிகள் தினசரி கடத்தப்படுகின்றனர் என்று வதந்தி பரப்பியிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


