
‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது,’’ என்று கூறி பகிரப்படும் ஃபேஸ்புக் பதிவு ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவு பார்க்க சற்று மன அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடியதாக இருந்தாலும், இதில் கூறப்பட்டுள்ள விசயம் உண்மையா என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது.
ஏனெனில், கடந்த 2017, டிசம்பர் 15 அன்று பகிரப்பட்ட இந்த ஃபேஸ்புக் பதிவு இன்றளவும் உண்மை என நம்பி பலரால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், சில புகைப்படங்களை பகிர்ந்து, அதன் மேலே, ‘’ஜப்பானில் மனித இறைச்சி விற்பனை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள ‘சாப்பாட்டு சகோதரர்கள்‘ என்ற உணவகம், 100 டாலரில் இருந்து 1193 டாலர் வரை மனித இறைச்சியை விற்கிறது. இதற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது,‘’ என்று விலாவரியாக எழுதியுள்ளனர். இது பார்ப்பதற்கு, எதோ ஒரு ஆங்கில செய்தியை அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பு செய்து பகிர்ந்ததைப் போல உள்ளது.
இதன்பேரில், இப்படி ஏதேனும் செய்தி வெளியாகியுள்ளதா, ஜப்பானில் இப்படி சட்டப்படி மனித இறைச்சி விற்பனை அங்கீகரிக்கப்பட்டுள்ளதா, என்று தகவல் தேடினோம். அப்போது, இது தவறான தகவல் என தெரியவந்தது.
கடந்த 2016ம் ஆண்டில், ஸ்பெயின் மொழியில் கற்பனையான நகைச்சுவை செய்திகளை பகிரும் இணையதளம் ஒன்று (lavozpopular.com), இந்த செய்தியை முதன்முதலாக வெளியிட்டிருந்தது. அதனைப் பலரும் காப்பியடித்து, உலகம் முழுக்க மொழிபெயர்ப்பு செய்து தங்களது வட்டாரத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
ஸ்பானிஷ் மொழியில் பகிரப்பட்ட செய்தியை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து கீழே இணைத்துள்ளோம்.

தங்களது இணையதளத்தில் வெளியாகும் செய்தி, கற்பனையானதுதான் என்றும், இதனை யாரும் உண்மை என நம்பி சர்ச்சை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர்களே தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, நகைச்சுவைக்காக வெளியிடப்பட்ட செய்தியை உண்மை என நம்பி பலரும் உண்மைத்தன்மையை சரிபார்க்காமல் பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த செய்தி மெக்சிகன் மொழியில் பரவியபோது Verne என்ற இணையதளம் இதுபற்றி உண்மைத்தன்மை சரிபார்த்துள்ளது. மெக்சிகோவில் உள்ள ஜப்பான் தூதரக அதிகாரி இதற்கு மறுப்பு தெரிவித்தும் உள்ளதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல, அமெரிக்காவில் தகவல் பரவியபோதும், வாஷிங்டனை சேர்ந்த ஜப்பானிய தூதரக அதிகாரி உரிய மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுவரை கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் நமக்கு தெரியவந்த உண்மையின் விவரம்,
1) ஸ்பெயின் மொழியில் கற்பனைச் செய்திகளை வெளியிடும் இணையதளம் ஒன்று நகைச்சுவைக்காக பகிர்ந்த செய்தியை பலர் உண்மை என நம்பி உலகம் முழுக்க பகிர்ந்து வருகின்றனர்.
2) இதன்பேரில், ஏற்கனவே ஜப்பானிய தூதரக அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட ஃபேஸ்புக் தகவல் தவறானது என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், +91 9049044263 என்ற எண்ணில் தகவல் தெரிவியுங்கள்.

Title:Fact Check: ஜப்பானில் மனித இறைச்சி விற்கப்படுகிறதா?- வதந்தியை நம்பாதீர்!
Fact Check By: Pankaj IyerResult: False
