
டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் போலீசாரிடம் சிக்கிய மைனர் திருமண ஜோடி என்று கூறி பகிரப்படும் ஒரு தகவலை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி இங்கே பார்க்கலாம்.
தகவலின் விவரம்:

இந்த ஃபேஸ்புக் பதிவில், இளம் திருமண ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். அதன் மேலே, ‘’திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர்களின் திருமண வீடியோவை டிக்டாக்கில் பதிவேற்றம் செய்த மாப்பிள்ளையின் நண்பன், மாப்பிள்ளை, இருவீட்டாரின் குடும்பத்தார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பெண்ணிற்கு 17 வயதுதான் என்பதால் அரசு காப்பகத்தில் சேர்த்துள்ளனர்,’’ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதனை நமது வாசகர்கள் நிறைய பேர் வாட்ஸ்ஆப்பில் அனுப்பி இதன் உண்மைத்தன்மை பற்றி ஆய்வு செய்யும்படி கேட்டுக் கொண்டனர்.
உண்மை அறிவோம்:
மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவில், ஜூன் 11, 2020 அன்று திருச்சி மாவட்டத்தில் இந்த திருமணம் நிகழ்ந்ததாகவும், அரை மணி நேரத்தில் டிக் டாக்கில் திருமண வீடியோ வெளியானதால் போலீசார் மணமகனை கைது செய்துவிட்டனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் கடந்த ஜூன் 11, 2020 அன்று திருச்சி மாவட்டத்தில் இப்படி ஏதேனும் திருமண சர்ச்சை நிகழ்ந்ததா என்று விவரம் தேடினோம்.
அப்போது நமக்கு கிடைத்த விவரம் வேறு ஒன்றாக இருந்தது. ஆம். சம்பவம் உண்மைதான். ஆனால், அவர்கள் வேறு ஒரு திருமண ஜோடி.

இதன்படி, திருச்சி மாவட்டம், வையம்பட்டியை சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும், பழனிசாமி என்பவருக்கும் கடந்த மாதம் 27 ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை அப்பகுதி இளைஞர் ஒருவர் டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
இதன்பேரில், மைனர் பெண்ணின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மாப்பிள்ளை பழனிசாமியை கைது செய்தனர். மைனர் பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
எனினும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் வேறு; நாம் ஆய்வு செய்யும் புகைப்படத்தில் இருக்கும் நபர்கள் வேறு.

எனவே, ஒரு பரபரப்பான செய்தி நிகழ்ந்ததும், அதனை உறுதி செய்யாமல் 2K கிட்ஸ், 90ஸ் கிட்ஸ் என்ற ட்ரோல் சிந்தனையில் வேறு ஒரு திருமண புகைப்படத்தை எடுத்து, திருச்சியில் நிகழ்ந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தி தவறான தகவல் பரப்பியுள்ளனர் என்று தெளிவாகிறது.
முடிவு:
உரிய ஆதாரங்களின்படி நாம் ஆய்வு மேற்கொண்ட புகைப்படம் பற்றிய தகவல் தவறு என நிரூபித்துள்ளோம். நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

Title:டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டதால் சிக்கிய மைனர் திருமண ஜோடி இவர்களா?
Fact Check By: Pankaj IyerResult: False
