தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை என்று குறிப்பிட்டு ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

இளைஞர் ஒருவரை இளம் பெண் அடிக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அந்த இளைஞர் ஆபாசமாகப் பேசியதால் அடித்ததாக அந்த பெண் விளக்கம் அளிக்கும் காட்சியும் அதில் இருந்தது. அந்த வீடியோவின் மீது, “சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வீடியோ மே 21, 2026 அன்று ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டிருந்தது. இதன் மூலம் தற்போதைய தவெக அரசு ஆட்சி அமைத்த பிறகான நிலை என்ற அர்த்தத்தில் பதிவிடப்பட்டிருந்தது. 

நிலைத் தகவலில், “சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை 🚨 நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த நிலையில் உள்ளது?” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை என்று குறிப்பிட்டு வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவில் தற்போதைய ஆட்சியின் பெயரை எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், மே 21ம் தேதி பதிவிட்டிருப்பதன் மூலம் தவெக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு என்ற அர்த்தத்தில் வீடியோ பதிவிடப்பட்டிருப்பது தெளிவாகிறது.

இளைஞரை பெண் ஒருவர் அடிக்கும் இந்த வீடியோ சில மாதங்களுக்கு முன்பு பார்த்த நினைவு இருந்தது. எனவே, இது தற்போதைய வீடியோ இல்லை என்பது தெரியவே, இதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். 

அப்போது, 2026 மார்ச் மாதம் 2ம் தேதி இந்த வீடியோவை செய்தி ஊடகங்கள் வெளியிட்டிருந்ததைக் காண முடிந்தது. பாலிமர் நியூஸ் இணையதளத்தில் இது தொடர்பாக செய்தியும் வெளியாகி இருந்தது. அதில், “கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பைக்கில் சென்ற பெண்களை பின் தொடர்ந்து ஆபாசமாக வர்ணனை செய்த இரண்டு இளைஞர்களை மடக்கிப்பிடித்து இரு பெண்களும் சேர்த்து அடித்தனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன் மூலம் இந்த சம்பவத்திற்கும் தற்போதைய ஆட்சிக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. மார்ச் 2ம் தேதி தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியிலிருந்தது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோவை இப்போதை சட்டம் ஒழுங்கின் நிலை என்று தவறாக பகிர்ந்திருப்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த சம்பவத்தின் வீடியோவை வைத்து தமிழ்நாட்டின் தற்போதைய சட்டம் ஒழுங்கின் நிலை என்று தவறாக பதிவிட்டிருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கின் தற்போதைய நிலை என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply