FACT CHECK: பண்ருட்டி வேல்முருகன் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தாரா?
நடிகர் சூர்யாவுக்கு பண்ருட்டி எம்.எல்.ஏ-வும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவருமான தி.வேல்முருகன் ஆதரவு தெரிவித்ததாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
அசல் பதிவைக் காண: Facebook I Archive
தந்தி டிவி வெளியிட்டது போன்ற நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "நடிகர் சூர்யாவுக்கு வேல்முருகன் ஆதரவு. எளிய மக்களின் வலியை தம் திரைத்துறை வாயிலாக மக்களுக்கு கடத்திய தம்பி சூர்யாவுக்கு என்னுடைய ஆதரவு. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தகவல்" என்று இருந்தது.
இந்த பதிவை Vçk Pràbà என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 நவம்பர் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
ஜெய்பீம் படத்துக்கு யார் ஆதரவு தெரிவித்தது, யார் தெரிவிக்கவில்லை என்பதே தற்போது சர்ச்சையாக மாறிவிட்டது. இந்த சூழலில், நடிகர் சூர்யாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி எம்.எல்.ஏ-வுமான வேல்முருகன் ஆதரவு தெரிவித்தார் என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எந்த ஒரு செய்தியும் வெளியாகாத சூழலில் இந்த நியூஸ் கார்டு உண்மையா என்று ஆய்வு செய்தோம்.
இந்த நியூஸ் கார்டில் உள்ள தமிழ் ஃபாண்ட் வழக்கமாக தந்தி டிவி வெளியிடும் தமிழ் ஃபாண்ட் போல இல்லை. சூர்யாவுக்கு வேல்முருகன் ஆதரவு தெரிவித்ததாக செய்தியும் இல்லை, தமிழ் ஃபாண்ட்டும் வித்தியாசமாக இருக்கவே, இது போலியாக உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று தெரிந்தது.
இதை உறுதி செய்ய 2021 நவம்பர் 20ம் தேதி தந்தி டிவி வெளியிட்ட நியூஸ் கார்டுகளை ஆய்வு செய்தோம். 20ம் தேதி வெளியான நியூஸ் கார்டுகளை பார்வையிடுவதற்கு முன்பு 22ம் தேதி தந்தி டிவி வெளியிட்ட பதிவு ஒன்று நமக்கு கிடைத்தது. அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு "FAKE NEWS" முத்திரையுடன் பதிவிட்டிருந்தனர். இதன் மூலம் இந்த நியூஸ் கார்டு போலியானது என்பது உறுதியானது.
வேறு எங்காவது நடிகர் சூர்யாவுக்கு வேல்முருகன் ஆதரவு தெரிவித்து, அதன் அடிப்படையில் போலியாக இந்த நியூஸ் கார்டை உருவாக்கினார்களா என்று அறிய வேல்முருகன் தரப்பைத் தொடர்புகொண்டு பேசினோம். வேல்முருகனின் உதவியாளர் காமராஜ் நம்மிடம் பேசினார். அவர், "இந்த நியூஸ் கார்டு போலியானது. திரைப்படம் தொடர்பாக எந்த ஒரு கருத்தையும் வெளியிடவில்லை" என்றார்.
இதன் மூலம் நடிகர் சூர்யாவுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் ஆதரவு தெரிவித்ததாக பகிரப்படும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நடிகர் சூர்யாவுக்கு வேல்முருகன் எம்.எல்.ஏ ஆதரவு தெரிவித்ததாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பண்ருட்டி வேல்முருகன் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்தாரா?
Fact Check By: Chendur PandianResult: False