
வங்கதேசத்தின் தீவிரவாத மற்றும் இந்திய எதிர்ப்பு கொள்கை கொண்ட அமைப்பு ஒன்று இந்தியாவில் நடந்த காக்ரோச் ஜனதா பார்ட்டி (கரப்பான்பூச்சி ஜனதா கட்சி) போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
பங்களாதேஷ் ஜமாத் இ இஸ்லாமி என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் ஸ்கிரீன்ஷாட் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. “இந்தியாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு” என்று தொடங்கும் அந்த கடிதத்தில் போராட்டத்திற்கு ஆதரவு என்பது போல் குறிப்பிடப்பட்டிருந்தது. நிலைத் தகவலில், “வங்காளதேசத்தின் தீவிரவாத மற்றும் இந்திய-எதிர்ப்புக் கொள்கை கொண்ட ‘ஜமாத்-ஏ-இஸ்லாமி’ அமைப்பு, இந்தியாவில் நடைபெற்று வரும் சிஜேபி (CJP) போராட்டத்திற்குத் தனது ஆதரவை அளித்துள்ளது. நீட் எதிர்ப்பு போராட்டம்னு போராடும் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் நக்சல்கள் என தேச துரோகிகள் அம்பலபடுத்தபட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
கல்வித் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேசவிரோதிகள் என்று காட்ட பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு வங்கதேச தீவிரவாத அமைப்பு ஆதரவு தெரிவித்ததாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. யார் வேண்டுமானாலும் இப்படி ஒரு கடிதத்தை உருவாக்கலாம் என்பதால் இந்த கடிதம் மீது சந்தேகம் எழுந்தது. எனவே, இந்த கடிதம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.
இப்படி ஒரு அறிவிப்பை அந்த அமைப்பு வெளியிட்டதா என்று அறிய கூகுளில் தேடினோம். அந்த அமைப்பின் சமூக ஊடக பக்கங்களைக் கண்டறிந்தோம். அதில் லோகோவே வித்தியாசமாக இருந்தது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கடிதம் போலியானதாக இருக்கலாம் என்று தெரிந்தது.

அந்த அமைப்பின் எக்ஸ் தள பக்கத்தை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கடிதம் போலியானது என்று குறிப்பிட்டு வெளியான பதிவு நமக்கு கிடைத்தது. அதில், “சமூக ஊடகங்களில் பரவி வரும் போலிக் கடிதத்தை வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி கண்டிக்கிறது; தீய பிரச்சாரத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட கடிதம் தவறானது என்பது உறுதியாகிறது.
முடிவு:
இந்திய எதிர்ப்பு கொள்கை உள்ள வங்கதேச அமைப்பு காக்ரோச் ஜனதா கட்சி போராட்டத்திற்கு ஆதரவு என்று பரவும் கடிதம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


