உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு தாயைக் கட்டிப்பிடித்த மெஸ்ஸி என்று பரவும் வீடியோ உண்மையா?

சமூக ஊடகம் சர்வதேசம் விளையாட்டு

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற பிறகு அர்ஜென்டினா அணியின் தலைவர் மெஸ்ஸி தனது தாயை கட்டி அனைத்த தருணம் என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்ஸியை ஒரு பெண்மணி கட்டியணைக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், அம்மா என்று மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன் மூலம் மெஸ்ஸி தன் தாயாருடன் இருக்கும் வீடியோ என்று புரிகிறது. இந்த பதிவை திருப்பதி சாய்  என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 டிசம்பர் 19ம் தேதி பதிவிட்டுள்ளார்.

உண்மைப் பதிவைக் காண: Facebook I indianexpress.com I Archive 

அதே போன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணையதளத்தில் இந்த புகைப்படம் பகிரப்பட்டிருந்தது. “உலகக் கோப்பையை வென்ற அர்ஜென்டினா.. தாயுடன் கொண்டாடிய மெஸ்ஸி” என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அம்மா என்று மட்டும் குறிப்பிட்டு ஃபேஸ்புக், ட்விட்டரில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

Archive

உண்மை அறிவோம்:

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் லியோனஸ் மெஸ்ஸி, உலகக் கோப்பையை வெற்றி பெற்ற பிறகு தன் குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவருடைய தாய், மனைவி, குழந்தைகளைக் கட்டிப்பிடித்துக் கொண்டாடியதாக புகைப்படங்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அதற்கு தொடர்பில்லாத வீடியோவை மெஸ்ஸி தன் தாயுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் என்று பலரும் பகிர்ந்து வரவே இது பற்றி ஆய்வு செய்தோம்.

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட வீடியோவை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அர்ஜென்டினா அணியின் தீவிர ரசிகரும், ஊடவியலாளருமான Roy Nemer என்ற ட்விட்டர் ஐடி கொண்டவர் இந்த வீடியோவை 2022 டிசம்பர் 21ம் தேதி பதிவிட்டிருந்தார். அதில், அர்ஜென்டினா தேசிய அணியின் தலைமை சமையல் கலைஞர் Antonia Farías என்பவர் மெஸ்ஸியை கட்டித் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் என்று குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் தேடிய போது வீடியோவில் இருப்பது மெஸ்ஸியின் தாய் இல்லை, அணியின் தலைமை சமையல் கலை நிபுணர் என்று பல செய்திகள் நமக்குக் கிடைத்தன.

Archive

மெஸ்ஸி தன்னுடைய தாயைக் கட்டித் தழுவும் வீடியோ கிடைக்கிறதா என்று பார்த்தோம். சில புகைப்படங்கள் கிடைத்தன. வீடியோவாக கிடைக்கவில்லை. சில புகைப்படங்கள் மட்டுமே கிடைத்தன. அதில் மெஸ்ஸியின் தாயார் அடர் நீல நிற டீ-ஷர்ட் அணிந்திருந்தார். ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவில் உள்ள பெண்மணியோ வெளிர் நீல நிற டீ-ஷர்ட் அணிந்திருந்தார். எனவே, இருவரும் வேறு வேறு நபர்கள் என்பது உறுதியானது. 

உண்மைப் பதிவைக் காண: thesun.co.uk I Archive

அதே நேரத்தில் மெஸ்ஸி தன் தாயைக் கட்டி அணைத்தார் என்று வெளியான செய்தி தவறு என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கிலத்தில் செய்தி வெளியாகி இருந்தது. அதில், திருத்தம் என்று குறிப்பிட்டு மெஸ்ஸி தன்னுடைய தாயைக் கட்டி அணைத்தார் என்று தவறான செய்தி வெளியாகி இருந்தது என்று குறிப்பிட்டிருந்தனர். அது மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களிலும் தலைமை சமையல் கலைஞரைக் கட்டியணைத்த மெஸ்ஸி என்று குறிப்பிட்டு செய்தி வெளியாகி இருப்பதைக் காண முடிந்தது. இதன் மூலம் மெஸ்ஸி உலகக் கோப்பையை வெற்றி பெற்ற பிறகுத் தன் தாயை அணைத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார் என்று பரவும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

உண்மைப் பதிவைக் காண: reuters.com I Archive

முடிவு:

உலகக் கோப்பை கால்பந்து இறுதி போட்டியில் வெற்றி பெற்றதும் தன்னுடைய தாயை கட்டியணைத்து கொண்டாடினார் மெஸ்ஸி என்று பரவும் வீடியோவில் இருப்பது அவரது தாய் அல்ல, அர்ஜென்டினா அணியின் தலைமை சமையல் கலைஞர் என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு தாயைக் கட்டிப்பிடித்த மெஸ்ஸி என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian 

Result: False