கட்சியின் பெயர், கொள்கை கூட தெரியாத சாதாரணத் தொண்டன் கூட அதிமுக-வில் தலைவர் ஆகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி உதாரணம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாக சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Twitter I Archive

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ புகைப்படத்துடன் புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், "கட்சியின் பெயரோ கொள்கையோ கூட தெரியாத சாதாரணத் தொண்டன் கூட அதிமுகவில் தலைவர் ஆகலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

ஆரியம் - திராவிடம் குறித்து எதுவும் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை ட்விட்டரில் 2023 அக்டோபர் 23ம் தேதி ஒருவர் பதிவிட்டிருந்தார்.

உண்மை அறிவோம்:

ஆரியம் - திராவிடம் என்று எதுவும் இல்லை என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசியிருந்தார். இது பற்றி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, எனக்கு அது பற்றித் தெரியாது என்று கூறியிருந்தார். கட்சியின் பெயரில் திராவிடம் இருக்கும் நிலையில் அது பற்றி எனக்குத் தெரியாது என்று எடப்பாடி பழனிசாமி கூறியது சிரிப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் கட்சியின் பெயர், கொள்கை கூட தெரியாதவர்கள் தலைவர் ஆகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி கூறிய பதில் ஒரு உதாரணம் என்று செல்லூர் ராஜூ கூறியதாக பலரும் சமூக ஊடகங்களில் நியூஸ் கார்டை பகிர்ந்து வருகின்றனர். உண்மையில் செல்லூர் ராஜூ இப்படி ஏதும் பேசினாரா, அது தொடர்பாக செய்தி வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். ஆனால், நமக்கு அப்படி எந்த ஒரு செய்தியும் கிடைக்கவில்லை.

இந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே இது போலியானது என்று தெரிகிறது. இதன் தமிழ் ஃபாண்ட் வழக்கமாக புதிய தலைமுறை வெளியிடும் நியூஸ் கார்டில் உள்ளது போல் இல்லை. எனவே, இந்த நியூஸ் கார்டை புதிய தலைமுறை சமூக ஊடக பொறுப்பாளருக்கு அனுப்பி, இது உண்மையா என்று கேட்டோம்.

‘’இது போலியானது, இதை நாங்கள் வெளியிடவில்லை என்று ஏற்கனவே எங்களது இணையதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளோம்,’’ என்று கூறி, அதற்கான இணைப்பை (லிங்க்) நமக்கு அனுப்பினார்.

உண்மைப் பதிவைக் காண: puthiyathalaimurai.com I Archive

இதன் மூலம் கட்சி பெயர் தெரியாதவர்கள் கூட அதிமுக-வின் பொதுச் செயலாளர் ஆகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமியின் உதவி ஒரு உதாரணம் என்று செல்லூர் ராஜூ கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

கட்சியின் பெயர் கூட தெரியாதவர்கள் தலைவர் ஆகலாம் என்பதற்கு எடப்பாடி பழனிசாமி உதாரணம் என செல்லூர் ராஜூ கூறினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:‘கட்சியின் பெயர் கூட தெரியாதவர் எடப்பாடி பழனிசாமி’ என்று செல்லூர் ராஜூ கூறினாரா?

Written By: Chendur Pandian

Result: False