
நடிகை நிவேதா பெத்துராஜை சின்ன அண்ணி என்று குறிப்பிட்ட சன் நியூஸ் தொலைக்காட்சியில் நியூஸ் கார்டு வெளியிடப்பட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படத்துடன் கூடிய சன் நியூஸ் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். நிலைத் தகவலில், “சின்ன அண்ணி அடியே அழகே! நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகை நிவேதா பெத்துராஜை தொடர்புபடுத்தி சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இதை உறுதி செய்யும் வகையில் சன் நியூஸ் தொலைக்காட்சியில் நடிகை நிவேதா பெத்துராஜை சின்ன அண்ணி என்று குறிப்பிட்டது போன்று ஒரு நியூஸ் கார்டை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நியூஸ் கார்டை பார்க்கத் தவறான முறையில் திருத்தப்பட்டது போன்று தெரிகிறது. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம். இந்த நியூஸ் கார்டில் தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, சன் நியூஸ் ஃபேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்கள் பகுதிக்கு சென்று தேடுதலில் (Search) நிவேதா பெத்துராஜ் என்று டைப் செய்து தேடினோம்.
அப்போது, 2022ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி நடிகை நிவேதா பெத்துராஜின் புகைப்படத்துடன் கூடிய நியூஸ் கார்டை சன் நியூஸ் வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில், “அடியோ அழகே..! நடிகை நிவேதா பெத்துராஜின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்” என்று இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து “சின்ன அண்ணி” என்று கூடுதலாக வார்த்தைகளை சேர்த்து விஷமத்தனமாக பகிர்ந்திருப்பது தெரியவந்தது.

இந்த நியூஸ் கார்டு போலியானது என்பதை உறுதி செய்துகொள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியின் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளருக்கு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நியூஸ் கார்டை அவருடைய வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைத்தோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
நடிகை நிவேதா பெத்துராஜை சின்ன அண்ணி என்று குறிப்பிட்டு நியூஸ் கார்டு வெளியிட்ட சன் நியூஸ் என்று பரவும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel

Title:“சின்ன அண்ணி நிவேதா பெத்துராஜ்” என்று பரவும் நியூஸ் கார்டு உண்மையா?
Written By: Chendur PandianResult: Altered
