
‘’ஜப்பானிய ஊடகங்கள், மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் இந்த கார்ட்டூனை ஒளிபரப்பி வருகின்றன,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் வீடியோ ஒன்றை சமூக ஊடகங்களில் காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.
தகவலின் விவரம்:
9, ஜூலை 2020 அன்று பகிரப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் வீடியோ பதிவை பலரும் உண்மை என நம்பி ஷேர் செய்து வருகின்றனர். இதுபற்றி உண்மைத்தன்மை கண்டறியும்படி நமது வாசகர்கள் சிலர் வாட்ஸ்ஆப் வழியே நம்மிடம் முறையீடு செய்தனர்.
உண்மை அறிவோம்:
மோடி பற்றி ஏற்கனவே ஜப்பானிய ஊடகங்கள் வெளியிட்ட கார்ட்டூன் எனக் கூறி ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதனை நாம் ஆய்வு செய்து, தவறான தகவல் என்று நிரூபித்திருந்தோம்.
இந்நிலையில், மேலே உள்ள ஃபேஸ்புக் பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இதில் உள்ள காட்சிகள் வேறு ஒன்றாக உள்ளன. தவிர, இதில், மோடி, ஜீ ஜின்பிங் குங்ஃபூ முறையில் சண்டையிடுவதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவை நன்கு ஒருமுறை கவனித்தபோது, அதில் இடது புறம் ஒரு லோகோ இடம்பெற்றுள்ளதை கண்டோம்.
இந்தியில் உள்ள இந்த லோகோவைப் பார்த்தால், இந்திய ஊடகங்கள் ஏதேனும் தயாரித்து வெளியிட்டதாக இருக்கும் என தெரியவந்தது. இதன்பேரில், இந்த வீடியோவின் ஒரு ஃபிரேமை பிரித்தெடுத்து, ரிவர்ஸ் இமேஜ் முறையில் தேடினோம். அப்போது இதுதொடர்பான வீடியோ ஆதாரம் கிடைத்தது.
இந்த வீடியோவின் 1.15 நிமிடத்தில் நாம் ஆய்வு செய்யும் ஃபேஸ்புக் பதிவில் உள்ள காட்சிகள் வருகின்றன. இந்த முழு வீடியோவை சற்று எடிட் செய்து, சிறிய வீடியோவாக மாற்றி பகிர்ந்து வருகின்றனர் என்று தெளிவாகிறது.
இதன்படி, So Sorry என்பது அரசியல் நிகழ்வுகளை விமர்சித்து, கேலிச்சித்திரங்களை தயாரித்து வெளியிடுவதற்காக, இந்தியா டுடே தொடங்கியுள்ள ஒரு Series ஆகும்.
எனவே, So Sorry கடந்த ஜூன் 27, 2020 அன்று வெளியிட்ட இந்த கார்ட்டூன் வீடியோவை பாராட்டி ஜப்பான் மொழியில் ஒருவர் கடந்த ஜூன் 30, 2020 அன்று ட்விட்டரில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்த பதிவின் தலைப்பை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தபோது, வேறு ஒரு அர்த்தம் கிடைத்தது. அதற்கான ஆதாரத்தை கீழே இணைத்துள்ளோம்.
எனவே, இந்தியா டுடே – So Sorry வெளியிட்ட கார்ட்டூனை பாராட்டி, ஜப்பானிய மொழியில் ஒருவர் ட்வீட் வெளியிட, அதனை தவறாகப் புரிந்துகொண்ட இந்தியர்கள், ஜப்பான் ஊடகங்களில் மோடி பற்றி இந்த கார்ட்டூன் வெளியிடப்பட்டதாகக் கூறி தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Title:மோடி மற்றும் ஜீ ஜின்பிங் சண்டையிடும் கார்ட்டூன் ஜப்பான் ஊடகங்களில் வெளியிடப்பட்டதா?
Fact Check By: Pankaj IyerResult: False
