FACT CHECK: ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா?

அரசியல் | Politics இந்தியா | India சமூக ஊடகம் | Social

2914ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழல் ஒழிப்பில் 185வது இடத்திலிருந்த இந்தியா, மோடி ஆட்சியில் 2020ம் ஆண்டு 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இந்த தகவல் உண்மையா என்று ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

2014, 2020ம் ஆண்டு ஊழல் ஒழிப்பில் இந்தியாவின் இடம் தொடர்பான ஒப்பீடு புகைப்படம் பகிரப்பட்டுள்ளது. அதில், “ஊழல் ஒழிப்பில் பிரதமர் மோடி அபார சாதனை. 6 ஆண்டுகளில் லஞ்ச – ஊழல் இல்லாத நாடுகளின் பட்டியலில் 185 ஆவது இடத்திலிருந்து 77-வது இடத்திற்கு முன்னேறியது இந்தியா. 2014 காங்கிரஸ் ஆட்சி 185-வது இடம். 2020 மோடி ஆட்சி 77-வது இடம். இதுதான் மோடியின் புதிய இந்தியா” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை Vinoj P Selvam என்பவர் 2021 மே 27ம் தேதி வெளியிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஊழல் ஒழிக்கப்பட்டது என்றால் முதல் 10க்குள் இந்தியா வந்திருக்க வேண்டும். ஆனால் 77வது இடத்தில் இருப்பதை எப்படி பெருமிதமாக கொள்வது என்று தெரியவில்லை. இந்தியாவில் ஊழல் ஒழிந்துவிட்டதா, குறைந்துவிட்டதா என்ற ஆய்வுக்குள் நாம் செல்லவில்லை. 2014ம் ஆண்டு ஊழல் ஒழிப்பில் இந்தியா 185வது இடத்திலிருந்ததா என்றும் தற்போது 2020ம் ஆண்டு 77வது இடத்திற்கு வந்துள்ளதா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

ஒவ்வொரு நாட்டிலும் ஊழல் எந்த அளவில் உள்ளது என்பது குறித்து ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ என்ற நிறுவனம் ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த நிறுவனம் வெளியிடும் பட்டியல்தான் உலக அளவில் ஒரு அளவுகோளாக பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் வெளியிட்ட 2020ம் ஆண்டுக்கான பட்டியலைத் தேடி எடுத்தோம்.

அசல் பதிவைக் காண: transparency.org I Archive

அதில் 2020ம் ஆண்டு மொத்தம் 179 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அடிப்படையில் 40 புள்ளிகளுடன் இந்தியா 86 இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் 2020ம் ஆண்டு 77 என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஒருவேளை 2019ம் ஆண்டில் வெளியான அறிக்கையாக இருக்குமோ என்று சந்தேகத்தின் அடிப்படையில் பார்த்தோம். 2019ம் ஆண்டு இந்தியா 41 புள்ளிகளுடன் 80வது இடத்திலிருந்தது. 2018ம் ஆண்டில் 41 புள்ளிகளுடன் 78வது இடத்தில் இருந்தது தெரிந்தது. இதன் மூலம் 2020ல் ஊழல் ஒழிப்பில் இந்தியா 77வது இடத்தில் உள்ளது என்ற தகவல் தவறானது என்பது உறுதியானது. ஏதாவது ஊடகம் இந்தியாவுக்கு 78வது இடம் கிடைத்தது என்று செய்தி வெளியிட்டதா என்று பார்த்தோம். அப்படி எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. விகடன் வெளியிட்டிருந்த செய்தியிலும் 78வது இடம் கிடைத்தது என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது.

அசல் பதிவைக் காண: transparency.org I Archive 1 I vikatan.com I Archive 2

அடுத்ததாக 2014ம் ஆண்டு இந்தியாவுக்கு 185வது இடம் கிடைத்ததா என்று ஆய்வு செய்தோம். 2014ம் ஆண்டு இந்தியா 38 புள்ளிகளுடன் 85வது இடத்திலிருந்தது. அந்த ஆண்டு மொத்தமே 174 நாடுகள்தான் அந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தன. பட்டியலில் 185 நாடுகளே இல்லாத நிலையில் இந்தியாவுக்கு 185வது இடம் கிடைத்ததாக தவறான தகவல் அளித்திருப்பது உறுதியானது.

அசல் பதிவைக் காண: transparency.org I Archive 1 I dinamalar.com I Archive 2

ஒருவேளை அதற்கு முந்தைய ஆண்டுகளில் இருக்குமோ என்று பார்த்தோம். 2012, 2013ம் ஆண்டில் 36 புள்ளிகளுடன் இந்தியா 94வது இடத்தில் இருந்தது. இதன் மூலம் இந்தியா 185வது இடத்தில் இல்லை என்பதும், தற்போது 2020ம் ஆண்டில் இந்தியா 77வது இடத்துக்கு முன்னேறி உள்ளது என்பதும் தவறான தகவல் என்று உறுதியாகிறது.

இதன் அடிப்படையில், இந்தியா ஊழல் ஒழிப்பில் 185வது இடத்தில் இருந்து 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2014ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது ஊழல் ஒழிப்பில் 185வது இடத்தில் இருந்த இந்தியா 2020ல் மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்று பரவும் பதிவு தவறானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:ஊழல் இல்லாத நாடுகள் பட்டியலில் 185வது இடத்திலிருந்து இந்தியா மோடி ஆட்சியில் 77வது இடத்துக்கு முன்னேறியதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False