திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்துக்கு தள்ளப்பட்டதா?

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

நியூஸ் 7 தமிழ் வெளியிட்ட நியூஸ் கார்டு பகிரப்பட்டுள்ளது. அதில், “வெள்ளை அறிக்கை. வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு 3வது இடத்திலிருந்து 11வது இடத்திற்கு தள்ளப்பட்டது” என்று இருந்தது. அதன் மீது, “6 மாதத்தில் தமிழ்நாட்டுக்கு இந்த கதி. 10 வருட அகோர பசியில் இருப்பவனிடம் ஆட்சியை கொடுத்தால் அவன் நல்லதா செய்வான்? விடியலோ விடியல்” என்று இருந்தது.

இந்த பதிவை பாரதம் காப்போம் என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்டவர் 2022 ஜனவரி 14ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நியூஸ் கார்டில் வெள்ளை அறிக்கை என்று உள்ளது. தேதியோ 2021 ஆகஸ்ட் 9 என்று உள்ளது. தி.மு.க 2021 மே மாதம் ஆட்சிக்கு வந்தது. மே 7ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றார். அதன் அடிப்படையில் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் இந்த நியூஸ் கார்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆறு மாதத்தில் தமிழகம் பின்னோக்கி சென்றுவிட்டதாகக் கூறப்படும் தகவல் தவறானது என்பதை இந்த அடிப்படை தகவல்களை உறுதி செய்துவிடுகின்றன.

நியூஸ் கார்டில், வெள்ளை அறிக்கை என்று குறிப்பிட்டிருப்பதன் மூலம் தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளை அறிக்கை தொடர்பான நியூஸ் கார்டு இது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. பழைய நியூஸ் கார்டை எடுத்து, ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் தமிழ்நாட்டை திமுக பின்னோக்கிக் கொண்டு சென்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருப்பது தெளிவானது.

இது தொடர்பாக ஆய்வு செய்தோம். அப்போது, இந்த நியூஸ் கார்டை நியூஸ் 7 தமிழ் 2021 ஆகஸ்ட் 9ம் தேதி இந்த நியூஸ் கார்டை வெளியிட்டிருந்தது. அதில் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நிலை ஏற்பட்டது என்று குறிப்பிடவில்லை. மேலும், அன்றைய தேதியில் தான் பழனிவேல் தியாகராஜன் தமிழ்நாடு அரசின் நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருந்தார்

வெள்ளை அறிக்கை தொடர்பான செய்திகளைப் பார்த்தோம். அதில், “வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது” என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியதாகச் செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அந்த தகவல் தெளிவில்லாமல் இருந்தது. எனவே, தமிழ்நாடு அரசு வெளியிட்ட நிதித் துறை தொடர்பான வெள்ளை அறிக்கையை தேடி எடுத்தோம். தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் அந்த வெள்ளை அறிக்கை நமக்கு கிடைத்தது. 

122 பக்கங்கள் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையில் கீ வார்த்தைகளைப் பயன்படுத்தித் தேடினோம். அப்போது, 111வது பக்கத்தில் நாம் தேடிய தகவல் இருந்தது. மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நடத்திய மாநிலங்களுக்கு இடையேயான சராசரி வளர்ச்சி தொடர்பான ஆய்வில் 2004-05 முதல் 2011-12 வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாடு 3வது இடத்தில் இருந்தது.

2012-13 முதல் 2018-19 வரையிலான காலகட்டத்தில் அது 11வது இடத்துக்கு சென்றது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் அ.தி.மு.க ஆட்சியில் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு பின்னோகி சென்றிருப்பதாக அவர் குறிப்பிட்டிருப்பது தெளிவாகிறது.

அசல் பதிவைக் காண: tnbudget.tn.gov.in I Archive

2012-13 முதல் 2018-19 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் வளர்ந்து வரும் மாநிலங்கள் பட்டியலில் பின்னோக்கி சென்றது என்று தி.மு.க அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தை வைத்தே, தி.மு.க ஆட்சிக்கு வந்த ஆறே மாதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு பின்னோக்கி சென்றுவிட்டது என்று தவறான தகவலைப் பகிர்ந்திருப்பது உறுதியாகிறது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் தி.மு.க ஆட்சிக்கு வந்த மூன்றே மாதத்தில் வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு தள்ளப்பட்டது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

திமுக ஆட்சிக்கு வந்த ஆறு மாதத்தில் வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்துக்கு சென்றதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதை ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வளர்ச்சி பெறும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு 11வது இடத்துக்கு தள்ளப்பட்டதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False