
அமித்ஷா காலடியில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பது போல, தொகுதி மறுவரையறைக்கு ஒகே சொல்லும் தி.மு.க என்று ஆனந்த விகடன் அட்டை படம் வெளியிட்டதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காலருகே தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்து எரியும் காகிதத்தை ஊதி அணைக்க முயற்சிப்பது போன்று ஆனந்த விகடன் வார இதழின் அட்டைப் படம் வெளியிட்டது போன்ற புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “தொகுதி மறுவரைக்கு ஒகே சொல்லும் திமுக” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த படத்தைப் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
மத்திய அரசு நடத்திய அனைத்துக் கட்சி கூட்டத்திற்குப் பிறகு தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் நிருபர்களை சந்தித்தனர். அப்போது, “நாடாளுமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்வது எந்த அடிப்படையில் அமையப் போகிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான எந்தவொரு தகவலையும் மத்திய அரசு இதுவரை எதிர்க்கட்சிகளுக்கு வழங்கவில்லை. தொகுதிகளின் எண்ணிக்கையை 25 முதல் 50 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் யாவும் அனுமானங்களின் அடிப்படையிலானவை; அதிகாரப்பூர்வமானவை அல்ல.
தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும் வகையில் எந்த வடிவத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டாலும், அதை திமுக எதிர்க்கும்” என்று கூறியிருந்தனர்.
ஆனால் மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க ஆதரவு அளிக்கிறது தமிழகத்தின் ஆளும் கட்சிகளும், அவர்கள் சார்பு ஊடகவியலாளர்களும் தொடர்ந்து கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க-வின் இந்த செயலை ஆனந்த விகடன் விமர்சித்து அட்டைப் படத்தை வௌியிட்டதாக ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அட்டைப்படத் தலைப்பு செய்தியில், “மறுவரையறை” என்பதை தவறாக “மறுவரை” என்று குறிப்பிட்டிருந்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அட்டைப்படத்தில் புத்தகத்தின் தேதி ஜூலை 24, 2026 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக ஆனந்த விகடன் வியாழக்கிழமை தேதிகளில் மட்டுமே வெளியாகும். ஜூலை 24 வெள்ளிக்கிழமை என்பதால் இந்த புகைப்படம் போலியானது என்பது உறுதியானது.

இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வைத் தொடர்ந்தோம். 2026ம் ஆண்டில் ஜூலை மாதம் வெளியான ஆனந்த விகடன் இதழ்களின் அட்டைப் படங்களை அதன் இணையதளத்திற்குச் சென்று பார்த்தோம். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற அட்டைப்படத்தை ஆனந்த விகடன் வெளியிடவில்லை. கடைசியாக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் புகைப்படத்துடன் அட்டைப்படம் (ஜூலை 21, 2026) வெளியிட்டிருந்தனர். அந்த புத்தகத்தில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் போன்று கருத்துப்படம் ஏதும் வெளியிட்டுள்ளார்களா என்று பார்த்தோம். அப்படி எதுவும் வெளியாகி இருக்கவில்லை. எனவே, இது போலியானது என்பது தெளிவானது.
இதை உறுதி செய்துகொள்ள ஆனந்த விகடன் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த புகைப்படத்தை வாட்ஸ்அப் மூலம் அனுப்பி விசாரித்தோம். இதை பார்த்ததும் இது போலியான புகைப்படம். இதை ஆனந்த விகடன் வெளியிடவில்லை என்று அவரும் உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட புகைப்படம் போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தொகுதி மறுவரையரையை தற்போதைய நிலையிலேயே தி.மு.க ஏற்க முடிவு செய்துவிட்டது என்பதை வெளிப்படுத்த அமித்ஷா காலடியில் மு.க.ஸ்டாலின் அமர்ந்திருப்பது போன்று அட்டைப்படம் வெளியிட்ட ஆனந்த விகடன் என்று பரவும் புகைப்படம் போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I X Post I Google News Channel I Instagram


