FACT CHECK: அடல் சுரங்கப்பாதை என்று கூறி பகிரப்படும் கலிஃபோர்னியா சுரங்கப்பாதை படம்!

அரசியல் இந்தியா சமூக ஊடகம்

அடல் சுரங்கப்பாதையின் படம் என்று கலிஃபோர்னியாவில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையின் படத்தைப் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

சுரங்கப்பாதையின் நுழைவாயில் படம் மற்றும் கட்டுமான, ராணுவ அதிகாரிகளின் படங்களை இணைத்துப் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “இந்த சுரங்கப்பாதையின் பெயர் அடல் சுரங்கப்பாதை (Atal Tunnel).

லே (Leh) விலிருந்து மணலி (Manali) வரை மலையைக் குடைந்து சுமார் 8.8 கி.மீ தூரத்திற்கு இந்தப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு சுமார் 46 கி.மீ பயணிக்க வேண்டியிருந்தது… Kudos to Indian army and Border Road Organisation” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவை J Karthik என்பவர் 2020 செப்டம்பர் 3ம் தேதி பகிர்ந்துள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

பிரதமர் திறந்து வைத்த சுரங்கப்பாதையின் நுழைவாயில் செவ்வகமாக இருந்தது. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் அரை வட்ட வடிவில் அருகருகே இரண்டு பாதைகள் அமைந்திருந்தன. எனவே சந்தேகம் ஏற்பட்டது.

அசல் பதிவைக் காண: tamilsnow.com I Archive 1 I toptamilnews I Archive 2

படத்தை ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடிய போது முன்னணி ஊடகங்கள் அனைத்திலும் அடல் சுரங்கப்பாதை என்று இந்த படத்தையே வைத்திருந்தனர். எனவே, இது உண்மையாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. நாம் பார்த்த படத்தில் தெற்கு வாயில் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், ஒருவேளை இந்த படம் வடக்கு நுழைவாயிலாக இருக்கும் என்று தோன்றியது.

Archive  I dnaindia I Archiv 2

எனவே, வடக்கு நுழைவாயில் படம் கிடைக்கிறதா என்று தேடிப் பார்த்தோம். அப்போது டிஎன்ஏ இணையதளத்தில் வடக்கு நுழைவாயில் படம் வெளியிட்டிருந்தனர். பிரதமர் மோடி வெளியிட்டிருந்த ட்வீட்டில் தெற்கு நுழைவாயில் படம் உள்ளது. எனவே, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது அடல் சுரங்கப்பாதை இல்லை என்பது உறுதியானது.

அப்படி என்றால் இது எங்கே எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது. வேறு வேறு ரிவர்ஸ் இமேஜ் தேடல்களில் இந்த படத்தை பதிவேற்றித் தேடினோம். அப்போது,  அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் உள்ள டெவில்ஸ் ஸ்லைட் டனல் என்று சில பதிவுகள் நமக்கு கிடைத்தன. அவற்றை ஆய்வு செய்தோம்.

அசல் பதிவைக் காண: tunnelingonline.com I Archive

அப்போது அந்த சுரங்கப்பாதை கட்டுமானப் பணி முதல் திறப்பு விழா என பல புகைப்படங்கள், வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அதன் இரு நுழைவாயில்களும் நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில் உள்ள புகைப்படத்துடன் ஒத்துப் போயின. இதன் மூலம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சுரங்கப்பாதையை வைத்து அடல் டனல் என்று முன்னணி ஊடகங்களும் சமூக ஊடகவாசிகளும் தவறான படத்தை பகிர்ந்து வந்திருப்பது உறுதியாகிறது. 

நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட பதிவில், லேவில் இருந்து மணாலி மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. லேவில் இருந்து மணாலி 427 கி.மீ தூரத்தில் உள்ளது. இதில் இடையே 9.2 கி.மீ தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

நம்முடைய ஆய்வில், அடல் சுரங்கப்பாதை என்று கலிஃபோர்னியாவில் உள்ள சுரங்கப்பாதையின் படம் பகிரப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அடல் சுரங்கப்பாதையுடன் தொடர்பு இல்லாத படம் மக்களை குழப்பும் வகையில் உள்ளது. இதன் அடிப்படையில் தவறான புரிதலை ஏற்படுத்தும் பதிவு என்று இது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், அடல் சுரங்கப்பாதை என பகிரப்படும் படம் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள சுரங்கப்பாதையின் படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:அடல் சுரங்கப்பாதை என்று கூறி பகிரப்படும் கலிஃபோர்னியா சுரங்கப்பாதை படம்!

Fact Check By: Chendur Pandian 

Result: Misleading

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply