
மது விடுதியில் நடனமாடிய சோனியா காந்தி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: threads.com I Archive
மது விடுதியில் மூன்று பெண்கள் நடனமாடும் புகைப்படத்துடன் காங்கிரஸ் தொண்டர்கள் சட்டையைக் கழற்றி போராட்டம் நடத்திய புகைப்படத்தை ஒன்றாக சேர்த்து பதிவிட்டுள்ளனர். அதில், “மேலாடை இன்றி கூட்டத்தின் நடுவே செல்வது அவர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. இத்தாலி பார் டான்ர் குரூப்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
நிலைத் தகவலில், “பார் டான்சர் நடத்தும் கட்சியில், உறுப்பினர்களும் அவ்வாறே செயல்படுகின்றனர். பாரதத்தின் சாபக்கேடு காங்கிரஸ் கட்சி” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
அரசியல் கட்சித் தலைவர்களைத் தனிப்பட்ட முறையில் ஆபாசமாகத் தாக்கி பேசும் பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தி மது விடுதியில் வேலை பார்த்தார் என்றும், மது விடுதியில் நடனமாடும் வேலையை செய்தார் என்றும் தொடர்ந்து பாஜக தரப்பிலிருந்து சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட வருகிறது.
அந்த வகையில், சோனியா காந்தி பாரில் நடமாடினார் என்று அவரது பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், “பார் டான்சர் நடத்தும் கட்சி” என்று காங்கிரஸ் கட்சியை குறிப்பிட்டு பலரும் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படத்தைப் பதிவிட்டு வருகின்றனர். இதன் மூலம் படத்தில் இருப்பவர் சோனியா காந்திதான் என்று விமர்சித்து வருகின்றனர். எனவே, இந்த புகைப்படம் தொடர்பாக ஆய்வு செய்தோம்.

உண்மைப் பதிவைக் காண: gettyimages.in I Archive
புகைப்படத்தில் உள்ள பெண்மணியைப் பார்க்க சோனியா காந்தி போல இல்லை. இது தெரிந்தும் வதந்தியைப் பரப்பியுள்ளனர். இதை ஆதாரங்கள் அடிப்படையில் உறுதி செய்ய ஆய்வைத் தொடங்கினோம். இந்த புகைப்படத்திலேயே gettyimages லோகோ உள்ளது. அந்த இணையதளத்திற்குச் சென்று புகைப்படத்தை தேடி எடுத்தோம். அதில், இந்த புகைப்படம் 1967ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அமெரிக்காவின் Auburn என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, சோனியா – ராஜிவ் காந்தி திருமணம் (பிப்ரவரி 1968) நடப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ராஜிவ்- சோனியா இருவரும் சந்தித்துக்கொண்டது இங்கிலாந்தில். அங்குள்ள கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள கல்லூரி ஒன்றில் சோனியா ஆங்கிலம் தொடர்பான படிப்பைப் படிக்க வந்தார். ராஜிவ் அங்குள்ள வேறு ஒரு கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்துக்கொண்டிருந்தார். ஆனால், இந்த புகைப்படமே அமெரிக்காவில் உள்ள ஒரு இடத்தில் உள்ள ஹோட்டலில் எடுக்கப்பட்டுள்ளது. பாரில் நடனமாட இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்றிருப்பார் என்பதெல்லாம் நம்பும் வகையில் இல்லை.
ராஜிவ் – சோனியா இருவரும் 1965ம் ஆண்டிலேயே சந்தித்துக்கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் காதலித்து வந்துள்ளனர். அந்த காலகட்டத்தில் ராஜிவின் தாயார் இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராக இருந்தவர். இதெல்லாம் தெரிந்த நிலையில் சோனியா காந்தி பாரில் நடனமாடினார் என்று கூறுவது சாியானது இல்லை. மேலும் இந்த புகைப்படத்தை தற்போது விற்பனைக்கு வைத்துள்ள gettyimages இணையதளமும் எந்த இடத்திலும் புகைப்படத்தில் இருப்பவர் சோனியா காந்தி என்று குறிப்பிடவில்லை. உண்மை இப்படி இருக்க படத்தில் இருப்பவர் சோனியா காந்தி என்று இவர்கள் எதன் அடிப்படையில் வதந்தியை பரப்பி வருகிறார்கள் என்பது இவர்களின் பின்னணியை வைத்தே புரிந்துகொள்ள முடிகிறது.
1968ம் ஆண்டு நடந்த ராஜிவ் – சோனியா திருமணத்தின் வீடியோ, புகைப்படங்கள் நமக்கு கூகுள் லென்ஸ் தளத்தில் தேடும்போது கிடைத்தன. அந்த படத்தையும் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் உள்ள படத்தையும் ஒப்பிட்டும் பார்த்தோம். இரண்டும் வேறு வேறு நபர்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
மதுவிடுதியில் நடனமாடிய சோனியா காந்தி என்று பரவும் புகைப்படம் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
FacebookI X PostI Google News ChannelI Instagram


