தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடையில் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என்று குறிப்பிட்டு டாஸ்மாக் கடைக்குள் நடந்த மோதல் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

டாஸ்மாக் கடைக்குள் நுழைந்து கடைக்குள் இருந்தவர்களை சிலர் தாக்கும் வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “சந்தி சிரிக்கும் சட்ட ஒழுங்கு  தவெக ஆட்சியில் தலைவிரித்து ஆடுது.. 

சட்டத்தை நாமளே கையில் எடுத்துக் கொண்டால் எதற்கு சட்டம்??” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து பழைய வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவும் அப்படி ஒன்றாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ஆய்வு செய்தோம்.

வீடியோ காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். சமீபத்தில் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்திருப்பதாகக் கூகுள் லென்ஸ் காட்டியது. ஆனால் நம்பகமான ஊடகம் எதுவும் இந்த வீடியோவை வெளியிட்டதாக செய்தி ஏதும் நமக்கு கிடைக்கவில்லை. 

எனவே, தொடர்ந்து வெவ்வேறு புகைப்படங்களை கூகுள் லென்ஸில் பதிவேற்றித் தேடினோம். அப்போது 2021ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி சன் நியூஸ் வெளியிட்டிருந்த வீடியோவில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோவின் காட்சி இருப்பது தெரியவந்தது. அதை பார்த்த போது நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட முழு வீடியோவும் அதில் இருந்தது. அதில், சிதம்பரத்தில் கடனுக்கு பீர் தர மறுத்த விற்பனையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

2021 பிப்ரவரியில் தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியில் இருந்தது. எனவே, இதற்கும் தவெக-வுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவாகிறது. இதன் அடிப்படையில் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று பரவும் வீடியோ தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

2021 பிப்ரவரியில் அதிமுக ஆட்சி இருந்த போது டாஸ்மாக் கடையில் நடந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது என்று தவறான சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: தவெக ஆட்சியில் டாஸ்மாக் கடையில் தாக்குதல் என்று பரவும் வீடியோ உண்மையா?

Fact Check By: Chendur Pandian

Result: False

Leave a Reply