குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை நாய் என்று விமர்சித்தாரா ஓ.பி.ஆர்?
"குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கு குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம்" என்று அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் கூறியதாக ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதன் நம்பகத்தன்மையை ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:
Facebook Link | Archived Link |
தேனி அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத் படத்துடன் கூடிய தந்தி டி.வி நியூஸ் கார்டு ஒன்று பகிரப்பட்டுள்ளது. அதில், "குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கே குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம் - அ.தி.மு.க எம்.பி ரவீந்திரநாத்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை, இணையதள திமுக என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தளபதி அலெக்ஸ் என்பவர் 2020 ஜனவரி 26ம் தேதி வெளியிட்டுள்ளார். இதை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் போடியில் நடந்த அ.தி.மு.க கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது அவரது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்து ஓ.பி.ரவீந்திரநாத் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கு குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம்" என்று கூறியதாக நியூஸ் கார்டு பகிரப்பட்டு வருகிறது.
பார்க்கும்போதே இது போலியானது போல் தெரிகிறது. இருப்பினும் இதை உறுதி செய்ய இந்த நியூஸ் கார்டை தந்தி டி.வி வெளியிட்டதா என்பதை அறிய, அதன் ஃபேஸ்புக் பக்கத்துக்கு சென்று பார்த்தோம். ஓ.பி.ஆர் தொடர்பான நியூஸ் கார்டை ஜனவரி 24ம் தேதி தந்தி டி.வி வெளியிட்டிருந்தது தெரிந்தது, அதில், "தேனியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தனக்கு எதிராக கருப்புக்கொடி காட்டியதற்கு ரவீந்திரநாத் எம்.பி கண்டனம்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
Archived Link |
இதன் மூலம் இந்த நியூஸ் கார்டை எடுத்து எடிட் செய்து வெளியிட்டிருப்பது தெரிந்தது. இதை உறுதி செய்ய தந்தி தொலைக்காட்சியின் இணையதள செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு கேட்டோம். அப்போது அவர்கள் இது தவறானது என்று உறுதி செய்தனர். மேலும், நாம் விசாரித்த ஒரு சில மணி நேரத்தில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று அவர்களே அதை விளக்கி பதிவிட்டனர்.
Archived Link |
ரவீந்திரநாத் அறிக்கையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு குரல் கொடுப்பவர்கள் பாகிஸ்தான் செல்லலாம் என்று கூறினாரா... என்று அறிய அவரது அறிக்கை தொடர்பான செய்தியைத் தேடினோம். தினத்தந்தி, தினமணி வெளியிட்டிருந்த செய்தி கிடைத்தன. அதில், ஓ.பி.ரவீந்திரநாத் தவறாக கூறியதாக எந்த ஒரு வரியும் இல்லை.
dailythanthi.com | Archived Link 1 |
dinamani.com | Archived Link 2 |
இதன் மூலம், "குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் நாய்கள் இங்கு குரைப்பதை நிறுத்திவிட்டு பாகிஸ்தானில் குடியேறலாம்" என்று ஓ.பி.ரவீந்திரன் கூறியதாக தந்தி டி.வி பெயரில் வெளியான நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில், மேற்கண்ட ஃபேஸ்புக் பதிவு தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.
Title:குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களை நாய் என்று விமர்சித்தாரா ஓ.பி.ஆர்?
Fact Check By: Chendur PandianResult: False