FactCheck: பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி எடப்பாடி பழனிசாமி ட்வீட் வெளியிட்டாரா?

சமூக ஊடகம் | Social தமிழ்நாடு | Tamilnadu

‘’கமல் ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி விமர்சித்து ட்வீட் வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி,’’ எனும் தலைப்பில் பகிரப்படும் தகவல் ஒன்றை காண நேரிட்டது. இதன் நம்பகத்தன்மை பற்றி ஆய்வு செய்ய தீர்மானித்தோம்.

தகவலின் விவரம்: 

Facebook Claim LinkArchived Link

இதில், கமல்ஹாசன் மற்றும் எடப்பாடி பழனிசாமி பெயரில் வெளியான ஃபேஸ்புக் பதிவு மற்றும் ட்வீட் ஆகியவற்றின் ஸ்கிரின்ஷாட்டை இணைத்து பகிர்ந்துள்ளனர். அதனை பார்க்கும்போது, ‘’முதல்வர் பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சி,’’ என்று கமல்ஹாசன் கூறியதாகவும், ‘’பிக் பாஸ் பார்க்க மாட்டேன், புரோமோ மட்டுமே பார்ப்பேன்,’’ என்று முதல்வர் கூறியதாகவும் தெரியவருகிறது.

இதனை உண்மை என நம்பி பலரும் வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:
தமிழ்நாட்டில் தற்போது அரசியல் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசியிருந்தார். இதற்கு, பதில் அளித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சி குடும்பங்களை சீரழிக்கும் ஒன்றாக உள்ளது என்று பதிலடி கொடுத்திருந்தார்.

Vikatan News Link I Tamil Hindu News Link

இதன்பேரில், கமல்ஹாசன் பதில் கொடுத்து, ஒரு ட்வீட் வெளியிட்டிருந்தார். முதல்வர் பழனிசாமி பிக் பாஸ் நிகழ்ச்சி பார்ப்பது மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.

Archived Link

இந்நிலையில், அவருக்கு மீண்டும் பதில் அளித்து, எடப்பாடி பழனிசாமி ட்வீட் வெளியிட்டதாகக் கூறி மேற்கண்ட தகவலை பரப்பி வருகின்றனர். உண்மையில், அது தவறான தகவல். அந்த ட்வீட்டில் உள்ள நேரம் டிசம்பர் 17, 2020, 08:10 pm என உள்ளது. இந்த நேரத்திற்கு, எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரப்பூர்வ @CMOTamilNadu ஐடியில் இருந்து எதுவும் ட்வீட் வெளியிட்டாரா என தகவல் தேடினோம்.

டிசம்பர் 17, இரவு 7.06 மணிக்கு அவர் கடைசியாக ஒரு ட்வீட் வெளியிட்டுள்ளார். அதன்பின், டிசம்பர் 18 காலையில்தான் அவரது பெயரில் ட்வீட் வெளியாகியுள்ளது.

நீண்ட நேரம் தேடியும், இவர்கள் குறிப்பிடும் நேரத்தில் அவர் எந்த பதிவும் வெளியிடவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. 

இது மட்டுமின்றி, நாம் ஆய்வு செய்யும் ட்வீட் ஸ்கிரின்ஷாட்டில், ட்விட்டர் ஐடியின் பெயரில் @CMOTamilnadu எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், உண்மையான ஐடியின் பெயர் @CMOTamilNadu ஆகும். எனவே, இது போலியான ட்வீட் என்று தெளிவாகிறது. 

முடிவு:

தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் நாம் ஆய்வு மேற்கொண்ட தகவல் தவறானது என்று ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் நிரூபித்துள்ளது. நமது வாசகர்கள் இத்தகைய தவறான செய்தி, புகைப்படம் மற்றும் வீடியோவை கண்டால், எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்புங்கள். நாங்கள், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

Avatar

Title:பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி எடப்பாடி பழனிசாமி ட்வீட் வெளியிட்டாரா?

Fact Check By: Pankaj Iyer 

Result: False