FACT CHECK: சதாம் உசேன் உடல் 15 ஆண்டுகளாக அழியாமல் உள்ளதா?

சமூக ஊடகம் சமூகம் சர்வதேசம்

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் உடல் அழியாமல் இன்றும் உள்ளது என்று ஒரு பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனின் உடல் வெளியே எடுக்கப்படுவது போன்ற காட்சி பகிரப்பட்டுள்ளது. வீடியோவின் மேல் “சதாம் ஹுசேன் உடல் அழியவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் வீடியோவில் ஒருவர் பேசும் ஒலி கேட்கிறது. “15 ஆண்டுகளுக்கு முன்பு அடக்கம் செய்யப்பட்ட சதாம் உசேனின் உடல் அழியாமல் உள்ளது” என்று அவர் கூறுகிறார். இந்த பதிவை இந்தியா எங்கள்தாய்நாடு இஸ்லாம்எங்கள்உயிர்மூச்சு என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் தாரா சத்தார் என்பவர் 2021 ஆகஸ்ட் 18ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

ஈராக்கில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் உள்ளதாக அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. பின்னர் கைது செய்யப்பட்ட அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டு அவருக்கு 2006ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி மரண தண்டனையும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சதாம் உசேன் மறைந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில் அவரது உடல் அழியாமல் உள்ளது என்று சமூக ஊடகங்களில் வீடியோ பரவி வருகிறது. இது உண்மையா என ஆய்வு செய்தோம்.

சதாம் உசேன் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடல் எப்போது வெளியே தோண்டி எடுக்கப்பட்டது என்று முதலில் தேடினோம். அப்போது, சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதற்கு சில நாட்கள் கழித்து அவருடைய உடல் ஈராக்கில் அவர் பிறந்த ஊரான அல் அவுஜாவில் (Al-Awja) அடக்கம் செய்யப்பட்டது என்றும், அதன் பிறகு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன்பு பழங்குடியினர் சதாம் உசேன் உடலை அங்கிருந்து எடுத்து வேறு இடத்துக்கு மாற்றிவிட்டதாகவும், இப்போது வரை சதாம் உசேன் உடல் எங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என்றும் செய்திகள் கிடைத்தன. அப்படி என்றால் இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்தது.

அசல் பதிவைக் காண: reuters.com I Archive

எனவே, வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற ஒரு வீடியோ யூடியூபில் நமக்குக் கிடைத்தது. 2007ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி அந்த வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதாவது, சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதில் இருந்து 9வது நாள். அதில் சதாம் உசேனின் உடல் நல்லடக்கம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வீடியோவில் சதாம் உசேன் உடல் அவரது ஆதரவாளர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பெட்டியில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இஸ்லாமிய முறைப்படி அடக்கச் சடங்கு நடக்கிறது. 

அசல் பதிவைக் காண: YouTube 

கடைசியில் பெட்டியிலிருந்து அவரது உடல் வெளியே எடுக்கப்படுகிறது. பெட்டியிலிருந்து சதாம் உசேன் உடல் வெளியே எடுக்கும் பகுதியை மட்டும் தனியாக எடுத்து 15 ஆண்டுகளாக சதாம் உசேன் உடல் அழியாமல் உள்ளது என்று வதந்தி பரப்பி வருவது உறுதியானது. இதன் அடிப்படையில் சதாம் உசேன் உடல் 15 ஆண்டுகளாக அழியாமல் உள்ளது என்று பகிரப்படும் தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

சதாம் உசேன் உடல் 15 ஆண்டுகளாக அழியாமல் உள்ளது என்று பகிரப்படும் வீடியோ 2007ம் ஆண்டு அவர் அடக்கம் செய்யப்பட்ட போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:சதாம் உசேன் உடல் 15 ஆண்டுகளாக அழியாமல் உள்ளதா?

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •