FACT CHECK: ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நடனம் என்று பகிரப்படும் பாகிஸ்தான் வீடியோ!

சமூக ஊடகம் | Social சமூகம் சர்வதேசம் | International

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நடனமாடிக் கொண்டாடினார்கள் என்று ஆடியோ எடிட் செய்யப்பட்ட வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive

தாலிபான்கள் போன்று தோற்றம் அளிக்கும் துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடனமாடும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. வீடியோவில் தமிழ் பாட்டுக்கு ஆடுவது போல ஆடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான் தீவிரவாதிகள் தமிழ் பாட்டுக்கு நடனம் ஆடுகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த பதிவை நாகேந்திரன் இந்து மக்கள் கட்சி என்ற ஃபேஸ்புக் ஐடி கொண்ட நபர் 2021 ஆகஸ்ட் 21ம் தேதி பதிவிட்டுள்ளார். இதே போன்று ஆடியோ மட்டும் எடிட் செய்யப்பட்டு தமிழ் பாடல்களுக்கு தாலிபான்கள் நடனமாடியது போன்று பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

உண்மை அறிவோம்:

தாலிபான்கள் போன்று காட்சி அளிக்கும் நபர்கள் வீடியோ பகிரப்பட்டுள்ளது. பல்வேறு தமிழ் பாடல்களுக்கு ஆடுவது போன்று பலரும் எடிட் செய்து இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். ஆனால் அனைவரும் இது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடனமாடிய காட்சி என்றே குறிப்பிட்டு வருகின்றனர். சிலர் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய மகிழ்ச்சியில் தாலிபான்கள் நடனமாடினர் என்றும் பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோ காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, இந்த வீடியோ 2021ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி யூடியூபில் Qaiser khan என்பவர் பதிவேற்றம் செய்திருந்தார். தாலிபான்களின் வேடிக்கையான நடனம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று குறிப்பிடவே உண்மையில் இது ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டதா, பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.

அசல் பதிவைக் காண: YouTube

இந்த நிலையில் ஆல்ட் நியூஸ் என்ற ஃபேக்ட் செக் ஊடகம் இது தொடர்பான கட்டுரையை முதலில் வெளியிட்டிருந்தது. அதில், இந்த வீடியோவில் வருபவர்களில் ஒருவரான வாஹிப் புக்தூன் (Wahab Pukhtoon) என்ற நபரை கண்டறிந்து அவரிடம் விளக்கம் கேட்டு, இது பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதுதான் என்பதை உறுதிப்படுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தனர்.

அடுத்தப்படியாக, நம்முடைய ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் இந்த வீடியோ தொடர்பான கட்டுரை வெளியாகி இருந்தது. அவர்களும், இதேபோல வாஹிப் புக்தூனைத் தொடர்பு கொண்டு பேட்டி எடுத்துள்ளனர். அதனால் ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலப் பிரிவில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டு கேட்டோம். 

அவர்கள் கூறுகையில், ‘’இது பாகிஸ்தானில் ஒரு திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ. இந்த வீடியோவில் உள்ள வாஹிப் புக்தூன் (Wahab Pukhtoon) என்ற நபரை அடையாளம் கண்டு அவரைத் தொடர்புகொண்டோம். அவர், இந்த வீடியோ கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பானு மாவட்டத்தில் நடந்த திருமணம் ஒன்றின் போது எடுக்கப்பட்டது என்று உறுதி செய்தார். மேலும் அவர் நமக்குத் திருமண நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படத்தையும் அனுப்பியிருந்தார். வீடியோவில் இருந்தவர்கள் அந்த புகைப்படத்தில் இருப்பதையும் காணலாம்,” என்றனர்.

ஃபேக்ட் கிரஸண்டோ ஆங்கிலத்தில் வெளியான கட்டுரையில், இந்திய ஊடகங்கள் பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவை ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கொண்டாட்டம் என்று தவறாக வெளியிட்டதாக வெளியான ட்வீட் பதிவையும் வெளியிட்டிருந்தனர்.

Archive Link

இதன் மூலம் இது ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நடனமாடிக் கொண்டாடினார்கள் என்று பரவும் தகவல் தவறானது என்பது உறுதியாகிறது.

முடிவு:

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் உற்சாக நடனமாடினார்கள் என்று பரவும் வீடியோ 2021 மார்ச் மாதம் பாகிஸ்தானில் நடந்த திருமணம் ஒன்றின் போது எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன்  ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் நடனம் என்று பகிரப்படும் பாகிஸ்தான் வீடியோ!

Fact Check By: Chendur Pandian 

Result: False