FACT CHECK: மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாகப் பறந்ததாக பரவும் வதந்தி!

அரசியல் சமூக ஊடகம் தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாக பறந்தது என்று சமூக ஊடகங்களில் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. அது பற்றி ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook 1 I Facebook 2 I Archive

புதிய தலைமுறையில் வெளியான செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை பகிர்ந்துள்ளனர். அதில், “விமான நிலையம், சென்னை, முதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி” என்று இருந்தது. மேலும் அதன் மீது, தமிழ்நாடு முதல்வர் முத்துவேலு கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் காரில் தலைகீழாய் பறந்த தேசியக் கொடி” என்று இருந்தது. இந்த பதிவை Sivappugaz Adv என்ற ஃபேஸ்புக் ஐடியைக் கொண்டவர் 2021 ஆகஸ்ட் 19ம் தேதி பதிவிட்டுள்ளார்.

இதே போல், இந்து மக்கள் சேவா என்ற ஃபேஸ்புக் பக்கம் “தமிழக முதல்வர் வாகனத்தின் கொடி” என்று பகிர்ந்து வருகிறது. பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

புதிய தலைமுறை வெளியிட்டிருந்த செய்தியில் முதலமைச்சர் காரில் தலைகீழாகப் பறந்த தேசியக் கொடி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. படத்தை உற்றுப் பார்த்தால் புதுச்சேரி முதல்வராக இருந்த நாராயணசாமி போல தெரிந்தது. எனவே, பழைய செய்தி எதையோ எடுத்து மு.க.ஸ்டாலின் மீது குற்றம்சாட்டி சமூக ஊடகங்களில் பகிர்ந்திருப்பது தெரிந்தது. எனவே, இது பற்றி ஆய்வு செய்தோம்.

“முதலமைச்சர் காரில் தலைகீழாய் பறந்த தேசியக் கொடி” என்று கூகுளில் டைப் செய்து தேடினோம். அப்போது 2017ம் ஆண்டு புதிய தலைமுறை வெளியிட்டிருந்த வீடியோ செய்தி நமக்கு கிடைத்தது. அதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்ற காரில் தேசியக் கொடி தலைகீழாக பறந்தது” என்று குறிப்பிட்டிருந்தனர். 

தொடர்ந்து தேடிய போது விகடன், இந்தியா டுடே என அனைத்து முன்னணி ஊடகங்களிலும் இந்த செய்தி 2017ம் ஆண்டு வெளியாகி இருப்பது தெரிந்தது. சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த நாராயண சாமி காரில் ஏறி அமர்ந்தார். அப்போது அவரது காரில் தேசியக் கொடி தலைகீழாக இருப்பது தெரிந்தது. உடனடியாக அது சரியாகப் பொருத்தப்பட்டது.

மேலும், தேசியக் கொடியை தலைகீழாக பொருத்திய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட செய்தியும் நமக்கு கிடைத்தது.

அசல் பதிவைக் காண: vikatan.com I Archive 1 I indiatoday.in I Archive 2

இதன் மூலம் 2017ம் ஆண்டு புதுச்சேரி முதல்வர் காரில் டிரைவர் தேசியக் கொடியை தலைகீழாக பொருத்திய செய்தியை எடுத்து வந்து, தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாக பொருத்தப்பட்டுள்ளது என்று விஷமத்தனமாக வதந்தி பரப்பி வருவதாக, உறுதி செய்யப்படுகிறது. 

முடிவு:

மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாக பொருத்தப்பட்டது என்று பரவும் தகவல் தவறானது என்பதை  தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I Twitter I Google News Channel

Avatar

Title:மு.க.ஸ்டாலின் காரில் தேசியக் கொடி தலைகீழாகப் பறந்ததாக பரவும் வதந்தி!

Fact Check By: Chendur Pandian 

Result: False

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •