
பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்து வீடியோ என்று ஒரு ஹெலிகாப்டர் விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது பற்றி ஆய்வு செய்தோம்.
தகவலின் விவரம்:

அசல் பதிவைக் காண: Facebook I Archive
ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தபடி பறக்கும் வீடியோ பகிரப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 14 பேருடன் சென்ற, விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் …” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவை Thamarai Shyam என்ற ஃபேஸ்புக் ஐடி-யைக் கொண்ட நபர் 2021 டிசம்பர் 8ம் தேதி பதிவிட்டுள்ளார். பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.
உண்மை அறிவோம்:
2021 டிசம்பர் 8ம் தேதி தமிழ் நாட்டின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடன் பயணித்த 12 பேர் உயிரிழந்தனர். பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான காட்சி என்று சில வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றன.
ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானது என்று செய்திகள் கூறுகின்றன. ஆனால், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட ஃபேஸ்புக் வீடியோவில் ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்தபடி பறக்கும் காட்சி உள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்தவே இது பற்றி ஆய்வு செய்தோம்.
வீடியோ காட்சியைப் புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடலில் பதிவேற்றித் தேடினோம். அப்போது, அது தற்போது நிகழ்ந்த விபத்தின் வீடியோ இல்லை என்பது தெளிவானது. இந்த வீடியோவை தி டெலிகிராப் என்ற ஊடகம் 2020ம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி யூடியூபில் பதிவிட்டிருந்தது நமக்குக் கிடைத்தது. அதில், சிரியா நாட்டின் ஹெலிகாப்டரை புரட்சிப் படையினர் வீழ்த்தினர் என்று குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான பல செய்திகள், வெளியிடப்பட்ட வீடியோக்கள் நமக்குக் கிடைத்தன.
அசல் பதிவைக் காண: aljazeera.com I Archive 1 I thescottishsun.co.uk I Archive 2
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து 2021 டிசம்பர் 8ம் தேதி நடந்தது. ஆனால், இந்த வீடியோ 2020ம் ஆண்டு பிப்ரவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், துருக்கி ஆதரவு சிரியா புரட்சியாளர்கள் சிரியா நாட்டு ஹெலிகாப்டரை வீழ்த்தியதாக குறிப்பிட்டுப் பல செய்திகள் கிடைத்துள்ளன. இந்த ஆதாரங்கள் அடிப்படையில், விபத்துக்குள்ளான பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் என்று பகிரப்படும் வீடியோ தகவல் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.
முடிவு:
பிபின் ராவத் சென்ற விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் என்று பகிரப்படும் வீடியோ 2020ம் ஆண்டு சிரியாவில் எடுக்கப்பட்டது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, நமது வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.
சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…
Facebook I Twitter I Google News Channel
Title:பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து என்று பரவும் சிரியா வீடியோ!
Fact Check By: Chendur PandianResult: False


