விஜயலட்சுமிக்கு வீடு வழங்கப்படும் என்று சீமான் கூறினாரா?

False அரசியல் சார்ந்தவை | Political தமிழகம் | Tamil Nadu

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் விஜயலட்சுமிக்கு வீடு கொடுக்கப்படும் என்று சீமான் கூறியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

சீமான் புகைப்படத்துடன் தந்தி டிவி வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “விஜயலட்சுமிக்கு வீடு. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் என்னால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு தனி வீடு ஒன்றை நஷ்ட ஈடாக கொடுப்பேன் – சீமான்” எனறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையேயான பிரச்னை பல ஆண்டுகளாக தொடர்ந்துகொண்டு இருக்கிறது. இந்த நிலையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விஜயலட்சுமிக்கு தனி வீடு வழங்கப்படும் என்று சீமான் தேர்தல் வாக்குறுதி அளித்தது போன்று நியூஸ் கார்டு ஒன்றை சிலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். சீமானை விமர்சிக்கும் வகையில் இந்த நியூஸ் கார்டு போலியாக உருவாக்கப்பட்டிருப்பது அதில் உள்ள தகவலை வைத்தே நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. எனவே, இது போலியானது என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தோம்.

முதலில் இப்படி ஒரு நியூஸ் கார்டை தந்தி டிவி வெளியிட்டதா என்று அறிய தந்தி டிவியின் ஃபேஸ்புக் பக்கத்தை பார்வையிட்டோம். அதில், நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது போன்ற நியூஸ் கார்டு ஒன்றை தந்தி டிவி வெளியிட்டிருப்பது தெரிந்தது. ஆனால் அதில் விஜயலட்சுமிக்கு வீடு கொடுப்போம் என்றெல்லாம் இல்லை. அதில், “நிற்க வைத்து சுடுவேன். பாலியல் குற்றங்கள் செய்பவர்களை நிற்க வைத்து சுடுவேன்” என்று சீமான் கூறியதாக இருந்தது. இந்த நியூஸ் கார்டை எடிட் செய்து தவறான தகவல் சேர்த்துப் பகிர்ந்திருப்பது தெளிவானது.

இதை உறுதி செய்துகொள்ள, தந்தி டிவி-யின் டிஜிட்டல் பொறுப்பாளருக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி இது உண்மையா என்று கேட்டோம். அவரும் “இது போலியானது, தந்தி டிவி இதை வெளியிடவில்லை” என்று உறுதி செய்தார். இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்ததும் தன்னால் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமிக்கு வீடு வழங்கப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: விஜயலட்சுமிக்கு வீடு வழங்கப்படும் என்று சீமான் கூறினாரா?

Fact Check By: Chendur Pandian

Result: False