இந்தியாவுக்குள் நுழைந்து முகாம்களை அமைத்த சீனா என்று பரவும் வீடியோ உண்மையா?

அரசியல் சார்ந்தவை | Political தவறாக வழிநடத்துபவை I Misleading தேசிய அளவில் I National

இந்தியாவுக்குள் 60 கி.மீ தூரத்திற்கு நுழைந்து புதிய முகாம்களை அமைத்த சீனா என்று ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

தகவலின் விவரம்:

உண்மைப் பதிவைக் காண: Facebook I Archive

பொது மக்கள் வன்முறையில் ஈடுபடுவது போன்று வீடியோ ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. வீடியோவின் மீது ஆங்கிலத்தில், “சீன ராணுவம் இந்தியாவுக்குள் 60 கி.மீ தொலைவுக்குள் நுழைந்ததாக தகவல்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நிலைத் தகவலில், “அருணாச்சலப் பிரதேசத்தின் அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டாக்சிங் பகுதிக்குள் சீன இராணுவம் 60 கிலோமீட்டர் தூரத்திற்குள் நுழைந்து புதிய முகாம்களை அமைத்ததாக தகவல்கள் வெளிவந்தன. இந்த கூற்றுக்களை இந்திய ராணுவம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. இராணுவத்தின் கூற்றுப்படி, வைரல் அறிக்கைகள் ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு புறம்பானவை. இது தொடர்பாக உள்ளூர் அமைப்பான நாஹ் நல சங்கம் ஒரு கோரிக்கை மனுவை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், களத்தில் புதிய அத்துமீறல் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இராணுவம் மற்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவத்தின் கூற்றுப்படி, இந்த பகுதி நீண்ட காலமாக மாறுபட்ட கண்ணோட்டங்களின் பிராந்தியமாக இருந்து வருகிறது, அங்கு இந்திய இராணுவம் மற்றும் ஐ.டி.பி.பி (இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை) தொடர்ந்து ரோந்து செல்கின்றன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

உண்மை அறிவோம்:

இந்தியாவுக்குள் சீன ராணுவம் எந்த தடையுமின்றி நுழைந்து முகாம்களை அமைத்துள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்த தகவல் தவறானது, அப்படி சீன ராணுவம் இந்தியாவுக்குள் நுழையவில்லை என்று இந்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. ஆனால், சீன ராணுவத்தை மக்கள் எதிர்த்துப் போராடுவது போன்று பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

பொது மக்கள் சீன ராணுவத்தை எதிர்த்தது போன்று ஒரு வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். வீடியோவில் இந்தியாவுக்குள் சீன ராணுவம் நுழைந்தது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவில் இந்த தகவலைப் பகிர்ந்து, அரசு தரப்பில் வௌியான செய்தியையும் பதிவிட்டிருந்தனர். இந்த வீடியோ பற்றி அதில் எந்த விளக்கமும் இல்லை. எனவே, இந்த வீடியோ தொடர்பாக ஆய்வு செய்தோம். வீடியோ காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸ் தளத்தில் பதிவேற்றித் தேடினோம். அப்போது இந்த வீடியோவை வடகிழக்கு மாநிலத்தைச் சார்ந்த ஊடகம் ஒன்று 2026 ஜூன் 7 தேதி யூடியூபில் பதிவிட்டிருந்ததைக் கண்டோம்.

அதில், அசாம் ரைஃபிள் படையினருக்கும் தாங்ஹுல் நாகா மெய்ரா பைபி (Tangkhul Naga Meira Paibi) அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 22 பெண்களுக்கு காயம் ஏற்பட்டது என்பது போல குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த தகவல் அடிப்படையில் தொடர்ந்து தேடினோம். அப்போது, மணிப்பூர் மாநிலத்தில் உக்ரூல் (Ukhrul) மாவட்டத்தில் நாகா மக்கள் வசிக்கும் பகுதியில் அசாம் ரைஃபில் படையினர் புதிய முகாம் அமைக்க முயன்ற போது அதை தாங்ஹுல் நாகா மெய்ரா பைபி என்ற அமைப்பைச் சார்ந்தவர்கள் எதிர்த்து போராட்டம் நடத்தியதாகவும் இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் கிடைத்தன. 

உண்மைப் பதிவைக் காண: indiatoday.in I Archive

இதன் மூலம் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட வீடியோ சீன ராணுவம் இந்தியாவுக்குள் நுழைந்த போது எடுக்கப்பட்டது இல்லை என்பது உறுதியாகிறது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பதிவு தவறான புரிதலை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்பது உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

மணிப்பூரில் அசாம் ரைஃபில் படை முகாமை எதிர்த்து மக்கள் போராடிய சம்பவத்தின் வீடியோவை இந்தியாவுக்குள் நுழைந்த சீன ராணுவம் என்று தவறாக பகிர்ந்திருப்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். வாசகர்கள் தங்களுக்கு சந்தேகம் என்று தோன்றும் தகவல், பதிவு, புகைப்படம், வீடியோவை எங்களது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு (+91 9049053770) அனுப்பினால், அதுபற்றி ஆய்வு செய்து உண்மை விவரத்தை வெளியிடுகிறோம்.

சமூக ஊடகங்களில் எங்களை பின் தொடர விரும்பினால்…

Facebook I X Post I Google News Channel I Instagram

Result Stamp

Title: இந்தியாவுக்குள் நுழைந்து முகாம்களை அமைத்த சீனா என்று பரவும் வீடியோ உண்மையா?

Written By: Chendur Pandian

Result: Misleading

Leave a Reply